மதுரை, பிப்.3-
மதுரை மாரியம்மன் தெப்பக்குள பராமரிப்பை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்திடம் ஒப்படைத்து கூடுதல் வசதிகளை அரசு மேம்படுத்த வேண்டும்.
தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரப்பப்பட்டதில் இருந்து மைய மண்டபத்திற்கு படகில் செல்ல யாரும் அனுமதிக்கப்படுவதில்லை. மைய மண்டபத்தில் வந்திக்கிழவி சிவபெருமானுக்கு பிட்டு கொடுத்த படலத்தை நினைவுபடுத்தும் சிலை உள்ளது. படிகள் வழியாக படகிலிருந்து பத்திரமாக இறங்க வசதி செய்யலாம். இரவு நேரத்தில் மைய மண்டபத்தில் மின்னொளியால் அலங்கரித்தால் இன்னும் பயணிகளை கவரலாம்.
தெப்பக்குளத்தை சுற்றிலும் ஏற்கனவே 50க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இக்கடைகளை ஒற்றை வரிசையில், போக்குவரத்துக்கு இடையூறின்றி, பார்ப்பதற்கும் அழகாக தெரியும் வகையில் ஒழுங்குபடுத்த வேண்டும்.
மதுரை நகருக்குள் இருக்கும் ஒரே பொழுதுபோக்கு அம்சம் தெப்பக்குளம் தான். எனவே, தெப்பக்குளத்தை சுற்றி கூடுதல் மின்விளக்குகள், மைய மண்டபத்தில் லேசர் விளக்குகளால் அலங்கரிக்க வேண்டும்.
வெளியில் இருந்து தெப்பக்குளம் மைய மண்டபத்தை சேர்த்து போட்டோ எடுக்கும் வகையில் 'செல்பி பாயின்ட்' அமைக்கலாம்.
சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் காபிஷாப் அமைத்தால் மதுரை மீனாட்சியம்மன் கோயிலை பார்க்க வரும் வெளிநாட்டு, வெளிமாநில பயணிகள் இங்கும் வந்து செல்வர். அவர்களிடம் படகு போக்குவரத்தையும் ஒப்படைத்தால் சுற்றுலா வளர்ச்சி நிதியிலிருந்து அடிப்படை வசதிகளை மேம்படுத்தமுடியும்.