சென்னை-செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் 'ஜி - 20' மாநாட்டு பிரதிநிதிகள் நேற்று முன்தினம் சுற்றுலா வந்தனர். சுற்றுலா பயணியர் பார்வையிட தடை செய்யப்பட்ட கடற்கரை கோயிலின் உட்பிரகாரம் திறக்கப்பட்டு அவர்கள் பார்வையிட அனுமதிக்கப்பட்டனர்.
மாமல்லபுரம் பல்லவர் கால சிற்பங்களில், கடற்கரை கோயில் குறிப்பிடத்தக்கது. ஐ.நா., சபை கலாசார பிரிவு, சர்வதேச பாரம்பரிய நினைவுச் சின்னமாக, இக்கோயிலையே முதலில் அங்கீகரித்தது.
இக்கோயிலின் கிழக்கு பகுதி சன்னிதியில் சேதமடைந்த சிவலிங்கம், சுவரில் சோமாஸ்கந்தர் சிற்பம், சுவரின் வெளிப்புறம் சிற்பங்கள் உள்ளன.
மேற்கு பகுதி சன்னிதியில், கருவறையில் சிவலிங்கம் அகற்றப்பட்டு, சுவரில் சோமாஸ்கந்தர் சிற்பம் சன்னிதி சுவரின் வெளிப்புறம் சிற்பங்கள் அமைந்துள்ளன.
இவற்றின் இடையில், ஸ்தலசயன பெருமாள் சன்னிதி, கோபுரம் இன்றி அமைந்துள்ளது. இதன் கருவறையின் கீழ் உள்ள பாறையில் 9 அடி நீள ஸ்தலசயன பெருமாள் பிரமாண்ட சிலை வடிக்கப்பட்டுள்ளது.
துவக்கத்தில் இச்சன்னிதி மட்டுமே அமைக்கப்பட்டு இருந்ததாகவும் அதன் பிறகே சிவபெருமான் உள்ளிட்ட மற்ற சன்னிதிகள் அமைக்கப்பட்டதாகவும் கருதப்படுகிறது. பல நுாற்றாண்டுகளாக வழிபாடு தடைபட்டு பாரம்பரிய நினைவுச்சின்னமாக மட்டுமே இருந்து வருகிறது.
கோயிலில் சிலைகள் அனைத்தும், கடற்காற்றின் உப்புத்தன்மை மற்றும் சுற்றுப்புற மாசு படிந்து அரிப்பு ஏற்பட்டு, விளிம்பு மழுங்கி, உருக்குலைந்து பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளன.
தொல்லியல் துறையின் வேதியியல் பிரிவு, சில ஆண்டுகளுக்கு ஒரு முறை உப்பு படிமம், மாசுக்களை அகற்றி பராமரித்து வருகிறது.
அதோடு, பயணியரின் வருகையாலும் பாதிப்பு ஏற்படக்கூடும் எனக் கருதிய தொல்லியல் துறையினர், உட்பிரகாரத்தில் பயணியர் நுழைய, 2017ல் தடை விதித்தனர்.
பயணியர் அத்துமீறி நுழைவதைத் தடுக்க, குறுகிய நுழைவிடம் அடைக்கப்பட்டது. அரசின் முக்கிய விருந்தினர் சுற்றுலா வந்தால் மட்டுமே தடுப்பை அகற்றி, அவர்கள் பார்வையிடஅனுமதிக்கப்படும்.
இந்நிலையில், நேற்று முன்தினம் 'ஜி - 20' நாடுகளின் பிரதிநிதிகள், கடற்கரை கோயிலில் பார்வையிட்டனர்.
அவர்களிடம் கோயிலின் முழு அமைப்பை விளக்கக் கருதிய தொல்லியல் துறையினர், சன்னிதிகள் மற்றும் உட்பிரகாரத்தை திறந்து, பார்வையிட அனுமதித்தனர்.