ஓசூர் : கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே, கோபசந்திரத்தில் எருது விடும் விழா நடத்த, நேற்று முன்தினமே அரசிதழில் வெளியிட்டு அனுமதி வழங்கப்பட்டது. ஓசூர் சப் - கலெக்டர் சரண்யா ஆய்வு பணியை முடித்திருந்தார்.
வருவாய்த்துறை, காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை ஆய்வு பணியை முடிக்கவில்லை.
விழா நேற்று நடக்கவிருந்த நிலையில், எருது களை அவிழ்த்து விட, இளைஞர்கள் தயாராகினர். ஆனால், கால்நடை பராமரிப்புத்துறை, தீயணைப்புத்துறை அதிகாரிகள் காலை, 8:00 மணிக்கு மேலாகியும் வரவில்லை. இதனால், அவர்களது ஆய்வு முடியவில்லை. அதிகாரிகள் வர தாமதமானது.
அதனால், 'நாளை அல்லது நாளை மறுநாள் எருது விடும் விழாவை நடத்துங்கள்' என, போலீசார் ஒலிபெருக்கி மூலம் தெரிவித்தனர். இதனால், ஆத்திரமடைந்த இளைஞர்கள், மறியல் மற்றும் கலவரத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக, ஓசூர் சப் கலெக்டர் சரண்யாவிடம் கேட்டபோது, ''எருது விடும் விழா நடத்த அனுமதி வழங்கப்பட்டது. வாய்மொழியாகவோ, அதிகாரப்பூர்வமாகவோ விழாவை நடத்த வேண்டாம் என கூறவில்லை. போராட்டத்திற்கு என்ன காரணம் என்பது, விசாரணையில் தான் தெரியவரும்,'' என்றார்.