மதுரை : காமெடி நடிகர் வடிவேல் 'கிணற்றை காணோம்...' என போலீசில் புகார் அளித்தது போல் 'மதுரையில் ஹிந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான வலைவீசி தெப்பக்குளத்தை காணோம்' என போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மதுரை பெரியார் பஸ் நிலையம் ரயில்வே கேட் அருகில் 1.81 ஏக்கர் பரப்பளவில் ஹிந்து அறநிலைய துறைக்கு சொந்தமான வலைவீசி தெப்பக்குளம் மற்றும் காளக்கோவில் என்ற கோயிலும் இருந்தது.
கொரோனாவிற்கு முன்புவரை அங்கு ஆண்டுதோறும் தை மாதம் கோயிலில் இருந்து சிவபெருமான் - மீனாட்சி அம்மன் ஊர்வலமாக இந்த வலைவீசி தெப்பக்குளம் வந்து மீன் பிடித்து திரும்பி கோவிலுக்கு புறப்பட்டு செல்லும் திருவிளையாடல் நிகழ்வு நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர்.
ஆனால் மூன்று ஆண்டுகளாக இந்நிகழ்வு நடக்காததால் அங்கிருந்த தெப்பக்குளத்தை காணவில்லை. அங்கே இருந்த சிவன், நந்தி, விநாயகர் சிலைகளையும் காணவில்லை. இதனால் பக்தர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்தாண்டு வலைவீசி திருவிழா நடத்த அந்த இடத்தில் முகூர்த்த கால் ஊன்ற அறநிலைய துறை அதிகாரிகள் சென்றபோது தான் தெப்பக்குளம் மாயமான விஷயம் தெரிந்து திகைத்த அதிகாரிகள், மீன்பிடி திருவிழாவை மீனாட்சி அம்மன் கோயில் வளாகத்திற்குள்ளேயே நடத்தியுள்ளனர். எனவே காணாமல் போன தெப்பக்குளம், சிலைகளை கண்டுபிடித்து பழமை மாறாமல் மீண்டும் வழிபாட்டிற்கு வைக்க வேண்டும்.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணையை துவக்கியுள்ளனர்.
வழக்கறிஞர் முத்துக்குமார் கூறுகையில், தெப்பக்குளம், கோயில் சிலைகள் காணாமல் போன முழு விவரங்களையும் 'தினமலர்' நாளிதழ் தான் முதன்முதலில் வெளிக்கொண்டுவந்தது. கொரோனா பாதிப்பு காலத்தில் தெப்பக்குளம் இருந்த இடத்தில் கட்டுமானப் பணிக்காக சிலர் பள்ளம் தோண்டினர். அப்போது இரண்டு பானைகளில் தங்கப் புதையல் கிடைத்ததாகவும், அதை ஆக்கிரமிப்பாளர்கள் அபகரித்துகொண்டதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. தங்கப் புதையல் கிடைக்கும் என தெப்பக்குளம், காளக்கோயிலை காணாமல் போகச் செய்துவிட்டனரா என சந்தேகம் உள்ளது. போலீஸ் வழக்கு பதிந்து விசாரிக்க வேண்டும் என்றார்.