மதுரை : நீர்வளத்துறை சார்பில் தண்ணீர் செல்லும் வாய்க்கால்கள் இருந்தாலும் 20 சதவீத வாய்க்கால்கள் பட்டா நிலத்தில் இருப்பதால், இதற்கென தனி அரசாணை பிறப்பித்து நீர்வழித்தடத்தை மீட்க வேண்டியது அவசியம்.
50 முதல் நுாறாண்டுகளுக்கு முன் வரை, தண்ணீர் செல்லும் பாதையில் தனியார் நிலங்கள் இருந்தால், தங்களது நிலத்தின் வழியாக தண்ணீர் செல்வதற்கு ஏற்ப தனிப்பாதை அமைத்திருந்தனர்.
நிலத்திற்கான சர்வே எண்ணில் நீர்வழிப்பாதை என்றிருக்காது. ஆனால் ஆண்டு முழுவதும் அந்த வழியாக தண்ணீர் கடந்து செல்லும். நாளடைவில் தண்ணீர் வரத்து நின்று போன வாய்க்கால்கள் மீண்டும் பட்டாதாரர்களால் சத்தமின்றி மேவப்பட்டதால் நீர்வழித்தடங்கள் பெரும்பாலான இடங்களில் மறைந்து போனது.
நீர்வளத்துறை, பஞ்சாயத்துக்குட்பட்ட வாய்க்கால், ஓடை ஆக்கிரமிப்பு என்றால் சர்வேயர் நிலத்தை அளந்து வி.ஏ.ஓ.,விடம் தகவல் தெரிவிப்பார்.
அவர் மூலம் நீர்வளத்துறை அல்லது பஞ்சாயத்துக்கு படிவம் 1 வழங்கப்படும். அதன்பின் ஆக்கிரமிப்பாளர்களின் பெயர் பட்டியலை பொதுவெளியில் வி.ஏ.ஓ., படிவம் 2 ஆக வெளியிடுவார். படிவம் 3 ன் மூலம் நீர்வளத்துறை, பஞ்சாயத்து அதிகாரிகள் 21 நாட்களுக்குள் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டுமென, ஆக்கிரமிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்புவார். அகற்றாவிட்டால் அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்றி நீர்வழித்தடத்தை மீட்கின்றனர்.
ஆனால் பட்டா நிலங்களில் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து விசாரித்து நீர்வழித்தடம் இருந்ததை உறுதிப்படுத்தினாலும் பட்டாதாரர்கள் பாதையை தருவதில்லை. சர்வே எண்ணிலும் நீர்வழித்தடம் என்பதற்கான ஆவணம் பதிவு செய்யப்பட்டிருக்காது.
இதனால் பட்டா நிலங்களில் நீர்வழித்தடத்தை மீட்க முடியாமல் அதிகாரிகள் திணறுகின்றனர். தமிழக அரசு தலையிட்டு இதுகுறித்து தனி அரசாணை பிறப்பிக்க வேண்டும்.
நீர்வழிப்பாதையை மீட்டு, அதற்குரிய இழப்பீடு விவசாயிகளுக்கு வழங்கினால் நீராதார சங்கிலி பாதிக்கப்படாது.