மாவட்டத்தில் 5 லட்சம் ஏக்கரில் நன்செய், புன்செய் விவசாயத்தில் நெல், பருத்தி, மிளகாய், வாழை, மஞ்சள் விவசாயம் நடக்கிறது. பிரதானமாக ஒரு போக நெல் சாகுபடி வட கிழக்கு பருவமழையை நம்பி நடக்கிறது.
இந்த ஆண்டு பருவ மழை பொய்த்த நிலையில் 3.50 லட்சம் ஏக்கரில்புன்செய் நிலங்கள் பாதிக்கப்பட்டு மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது.
ஆனால் தென் மேற்கு பருவ மழையால் வைகை, முல்லை பெரியாறு ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் வைகை அணைக்கு நீர்வரத்து இருந்ததுடன் கிருதுமால் நதியிலும், பரளை ஆறு வழியாகவும் தண்ணீர் சென்றது. இதையடுத்து பரமக்குடி, போகலூர், ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஒன்றரை லட்சம் ஏக்கரில் நெல் விவசாயம் நடந்தது.
தை முதல் நாள் துவங்கி அறுவடை செய்யப்படும் நிலையில், நுகர்பொருள் வாணிப கழகம் நெல் கொள்முதல் நிலையங்களை முழுமையாக திறக்காத நிலை உள்ளது. இதனால் தனியாரிடம்வெளி சந்தையில் கிலோ ரூ.17 வீதம் விற்கும் நிலை ஏற்படுகிறது. இதனால் அறுவடை இயந்திர வாடகை, ஏற்று, இறக்கு கூலி என செலவழித்த பணம் அதிகம் என்கின்றனர், விவசாயிகள்.
ராமநாதபுரம் பூர்வீக வைகை பாசன விவசாயிகள் கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் மலைச்சாமி கூறுகையில், தி.மு.க., தேர்தல் வாக்குறுதியாக குவிண்டால் ஒன்றுக்கு 2500 ரூபாய் குறைந்த பட்ச ஆதார விலையாக்கசட்டம் கொண்டு வருவோம், என்றனர்.
ஆனால் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாத நிலையில், குவிண்டாலுக்கு 2160 ரூபாய் என விலை நிர்ணயித்துள்ளனர். விவசாயிகளின் நஷ்டத்தை ஈடுகட்ட குவிண்டாலுக்கு ரூ. 3000 வழங்க உத்தரவிட வேண்டும்.
மேலும் கடந்த மாதத்தில் 100 இடங்களில் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும், என கூறிய நிலையில் ஒரு சில இடங்களில் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. இதனால் அதிகளவில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.