சென்னையில் வீடுகளுக்கு 'காஸ்' இணைப்பு வழங்குவதற்கான குழாயை, சாலையில் புதைவடத்தில் கொண்டு செல்ல மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது. இதற்கு, தமிழக அரசு ஒப்புதல் அளித்த பின், சென்னை மாநகரில் விரைவில் வீடுகளுக்கு, குழாய் வாயிலாக காஸ் இணைப்பு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
நாடு முழுதும் வீடுகள், ஹோட்டல்கள், வணிக வளாகங்கள் போன்றவற்றிற்கு, காஸ் சிலிண்டர்களுக்கு பதிலாக, குழாய் வாயிலாக காஸ் இணைப்பு வழங்கும் திட்டத்தை, மத்திய அரசு செயல்படுத்த உள்ளது.
அதன்படி மாநிலத்தில் நாகப்பட்டினம், காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், கோயம்புத்துார், கடலுார், திருவாரூர், ராமநாதபுரம், சேலம், திருப்பூர், வேலுார் ஆகிய மாவட்டங்களில், குழாய் வாயிலாக காஸ் இணைப்பு வழங்க, தமிழக அரசு 2020ல் அனுமதி வழங்கியது.
சென்னை மாநகராட்சியில், 'டோரன்ட் காஸ்' நிறுவனம், குழாய் வாயிலாக வீடுகளுக்கு காஸ் இணைப்பு வழங்கும் திட்டத்தை செயல்படுத்த உள்ளது.
இந்நிலையில், சென்னை மாநகராட்சியில் இத்திட்டத்தை செயல்படுத்துவது குறித்து, பல்வேறு கட்டங்களாக ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
குறிப்பாக சென்னையை பொறுத்தவரையில், மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலை ஆகிய துறைகளிடம் சாலைகள் இருப்பதால், இத்திட்டத்தை செயல்படுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டது.
தொடர்ந்து, சென்னை மாநகராட்சி, நெடுஞ்சாலைத் துறை பல்வேறு கட்ட ஆலோசனைக்குப் பின், இதற்கான நிலையான வழிகாட்டுதல் நெறிமுறைகளை இணைந்து உருவாக்கி உள்ளன.
இதில், காஸ் குழாய் புதைவடம், மற்ற சேவை நிறுவனங்களின் 'கேபிள்'களுக்கும், மழை நீர் வடிகால், பாதாள சாக்கடை கால்வாய்க்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் அமைக்கப்பட வேண்டும்.
மேலும் கல்வெட்டுகள், பாலங்கள் போன்றவை பாதிக்கப்படக் கூடாது. அதேபோல, போக்குவரத்து பாதிப்பு ஏற்படாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட, பல்வேறு வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இது குறித்து, சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
சென்னையில் தார்ச்சாலையில் புதைவடத்தில் காஸ் குழாய் இணைப்பு அமைக்க, 1 கி.மீ., துாரத்திற்கு 20 லட்சம் ரூபாய் வைப்புத் தொகையாக செலுத்த வேண்டும்.
அதேபோல, கான்கிரீட் சாலைக்கு 1 கி.மீ., துாரத்திற்கு, 21.75 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும். அதேபோல, நெடுஞ்சாலைத் துறை சாலையின் கட்டணமும் மாறுபடும்.
சம்பந்தப்பட்ட நிறுவனம், சாலை வெட்டுப்பணிகளை மேற்கொள்ள, மாநகராட்சி இணையம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். அதிகாரிகள் நேரடி கள ஆய்வு செய்து, அதன்பின் அச்சாலையில் காஸ் குழாய் புதைவட பணிக்கு அனுமதி அளிப்பர்.
அதற்கான அனுமதி பெறாமல் பணிகள் மேற்கொண்டால், சம்பந்தப்பட்டோர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டு, சாலையை சரி செய்வதற்கான தொகையில் ஐந்து மடங்கு கட்டணம் அபராதமாக விதிக்கப்படும்.
சென்னையில் குழாய் வாயிலாக வீடுகளுக்கு காஸ் இணைப்பு வழங்குவதற்கு, சென்னை மாநகராட்சி அனுமதி வழங்கி, அதற்கான பரிந்துரை மற்றும் வழிகாட்டுதல் குறித்து, தமிழக அரசின் அனுமதிக்கு அனுப்பியுள்ளது.
அவற்றை தமிழக அரசு பரிசீலித்து, விரைவில் அனுமதி வழங்கும் என எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -