சென்னை, சென்னை மாநகராட்சி கல்வித்துறை மற்றும் ரோட்டரி கிளப் ஆப் மெட்ராஸ் கிழக்கு இணைந்து, 'விங்க்ஸ் டூ பிளே' அமைப்பின் வாயிலாக, ஏழு ஆண்டுகளாக பல்வேறு நிலைகளில் மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தி, கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்படுகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, 2022 - 23ம் கல்வியாண்டில், 'விங்க்ஸ் டூ பிளே' அமைப்பின் வாயிலாக, 'தொழில் முனைவோர் திறன் மேம்பாடு' என்ற தலைப்பில், பள்ளி மாணவர்களிடையே, மூன்று நிலைகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.
முதல் சுற்றில் பள்ளி அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 478 மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட 32 மாணவர்களுக்கு இறுதி சுற்றுக்கான போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், எட்டு மாணவர்கள் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்கள் கல்வி சுற்றுலாவாக ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய் நகருக்கு வரும் மே மாதம் அழைத்து செல்லப்பட உள்ளனர்.
இந்நிலையில், வெற்றி பெற்ற மாநகராட்சி பள்ளி மாணவர்கள் விஷால், மைதிலி, லோக்பிரியன், வர்ஷினி, திவ்யதர்ஷினி, முகேஷ், கிஷோர், பிரத்யங்கா ஆகிய எட்டு பேருக்கு, ரிப்பன் மாளிகையில் மேயர் பிரியா பாராட்டு சான்றிதழ் வழங்கினார். உடன், மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார், கமிஷனர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.