ஆர்.கே.பேட்டை:பள்ளிப்பட்டு ஒன்றியம் நொச்சிலி கிராமத்தில் அரசு பாறை புறம்போக்கு நிலம் சர்வே எண்: 124/1ல், 9560 சதுர அடி பரப்பு நிலத்தில் கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மாவட்ட கலெக்டர் ஒப்புதலுடன் கால்நடை மருந்தக கட்டடம் கட்டி இயங்கி வருகிறது.
இந்நிலையில் கால்நடை மருந்தகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலத்தில் தனிநபர் ஒருவர் உலர் களம் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
அதாவது களம் கட்டுவதற்கு ஜே.சி.பி., இயந்திரம் மூலம் ஊராட்சி நிர்வாகம் அனுமதியின்றி, உலர் களம் கட்டுவதற்கு கடந்த இரண்டு நாட்களாக பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து திருத்தணி கால்நடை துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கால்நடை மருந்தக கட்டடத்திற்கு சொந்தமான நிலத்தில் தனிநபர் உலர்களம் கட்டும் தகவல் அறிந்ததும், ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் கிராம பொதுமக்கள் ஒத்துழைப்புடன் பணிகள் தற்காலிகமாக தடுத்து நிறுத்தப்பட்டன.
இருப்பினும் தனிநபர் மீண்டும் அந்த இடத்தில் களம் கட்டுவதற்கு முயற்சி செய்வதாக தகவல் அறிந்ததும், எங்களின் உயர் அதிகாரிகள் மற்றும் மாவட்ட கலெக்டரிடம் கால்நடை மருந்தகத்திற்கு சொந்தமான நிலம் ஆக்கிரமித்து களம் கட்டப்படுவது குறித்து புகார் மனு அனுப்பியுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆக்கிரமிப்பு குறித்து மாவட்ட கலெக்டர் நேரில் வந்து ஆய்வு செய்து, உலர்களம் கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.