வாலாஜாபாத்:வாலாஜாபாத் வட்டாரத்தில், குறிப்பிட்ட சில கிராமங்களில், போலியோ தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம் நடந்ததால், கிராம மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், நத்தாநல்லுார் கிராமத்தைச்சேர்ந்த கூலித்தொழிலாளியின் ஒன்பது வயதுள்ள மகளுக்கு திடீரென கை, கால் செயல் இழந்து விட்டது என, அவர் செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சமீபத்தில் சேர்க்கப்பட்டார்.
சிறுமி சிகிச்சை பெற்றுவரும் நிலையில், நத்தாநல்லுார், தேவரியம்பாக்கம் உள்ளிட்ட சுற்றியுள்ள பல கிராமங்களில், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம்களை சுகாதாரத் துறையினர் நடத்தினர்.
ஒன்பது வயது சிறுமிக்கு, திடீரென கை, கால் செயல் இழந்து சிகிச்சையில் இருக்கும் நிலையில், சம்பந்தமே இல்லாமல் பல ஊராட்சிகளில், சிறப்பு போலியோ சொட்டு மருத்துவ முகாம் நடத்தியுள்ளது, கிராமத்தில் உள்ள பலதரப்பினரை அதிர்ச்சி மற்றும் பலவித சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்ட சுகாதார நலப்பணிகள் துணை இயக்குனர் பிரியாராஜிடம் கேட்டபோது, ''கிராமத்தில், ஆய்வு செய்த பின் சரியான விபரத்தை தெரிவிக்கிறேன்,'' என்றார்.