ஸ்ரீவில்லிபுத்துார்:சதுரகிரி மலைப்பகுதியில் பெய்யும் மழை காரணமாக தை பிரதோஷ வழிபாட்டிற்கு பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பவுர்ணமி நாளான நாளையும் மழை பெய்தால் அனுமதி கிடையாது என வனத்துறை தெரிவித்துள்ளது.
விருதுநகர் மற்றும் மதுரை மாவட்டங்களில் எல்லையில் மேற்கு தொடர்ச்சி மலையில், நான்கு மலைகளுக்கு நடுவில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி கோவில். இங்கு, மாதந்தோறும் பவுர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில் வழிபாட்டிற்காக பிரதோஷத்தில் இருந்து நான்கு நாட்கள் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவர். அதன்படி, நேற்று தை மாத பிரதோஷத்தை முன்னிட்டு அனுமதி கிடைக்கும் என பக்தர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால், நேற்று முன் தினம் காலை முதல் கோவில் அமைந்துள்ள வனப்பகுதியில் மழை பெய்தது. இதனால், மலைப்பாதையில் குறுக்கே ஓடும் ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மழை தொடர்ந்தால், நீர்வரத்து மேலும் அதிகரிக்கும்.
எனவே, பக்தர்களின் பாதுகாப்பு கருதி நேற்றும் இன்றும் பக்தர்கள் மலையேற அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
பவுர்ணமி நாளான நாளையும் மழை பெய்தால் பக்தர்கள் மலையேற தடை விதிக்கப்படும் என வனத்துறை கூறியுள்ளது. மழை பெய்யாவிட்டால் பவுர்ணமி வழிபாட்டிற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். அன்றைய சூழ்நிலையை பொறுத்தே முடிவெடுக்கப்படும் என, சாப்டூர் வனச்சரகர் செல்வமணி தெரிவித்தார்.