மேட்டுப்பாளையம்:ஊடுருவிய மர தாவரங்களை கட்டுப்படுத்தி, இயற்கை தாவரங்களை வளர்க்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது,'' என, தமிழக முதன்மை தலைமை வன பாதுகாவலர் சுப்ரத் மகாபத்ரா பேசினார்.
தமிழ்நாடு மாநில நில பயன்பாட்டு ஆய்வு வாரியம், மாநில திட்ட குழு, மேட்டுப்பாளையம் வனக்கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் ஆகியன சார்பில், ஊடுருவிய மரத் தாவரங்களின் மேலாண்மை பற்றிய இரு நாள் சர்வதேச கருத்தரங்கு மேட்டுப்பாளையம் பிளாக் தண்டரில் நேற்று துவங்கியது.
இதில், தமிழக முதன்மை தலைமை வன பாதுகாவலர் சுப்ரத் மகாபத்ரா பேசியதாவது:
பெருமளவில் ஊடுருவிய மரத்தாவரங்களான நெய்வேலி காட்டாமணக்கு, உண்ணிச் செடி, வெங்காய தாமரை, சீமை கருவேல மரம் ஆகியவற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இவற்றால் நமது இயற்கை தாவரங்களின் வளர்ச்சி குறைந்துள்ளது. இந்த தாவரங்களை அகற்றிய பிறகு சுற்றுச்சூழலை மேம்படுத்த, நம் இயற்கை தாவரங்கள் வழங்கப்படும். இத்தாவரங்களில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பு குறித்து ஆய்வு செய்யப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
திட்டக்குழு உறுப்பினரும், மண்புழு ஆராய்ச்சியாளருமான சுல்தான் இஸ்மாயில் கூறுகையில்,ஊடுருவிய தாவரங்களின் வேர்களில் இருந்து உற்பத்தியாகும் திரவம், மண்ணில் உள்ள நுண்ணுயிரிகளையும், மண் புழுக்களையும், இயற்கை தாவரத்தின் வேர்களையும் பாதிக்கிறது. இந்த தாவரங்களை அகற்றுவதால் மண்வளம் பாதுகாப்படும்,'' என்றார்.
தமிழ்நாடு மாநில திட்டக்குழு துணை வனப் பாதுகாவலர் சுதா, கூடுதல் முதன்மை தலைமை வன பாதுகாவலர் அன்வர்தீன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.