சேலம்:பணி நாளை நீட்டித்து, 'கிடுக்கிப்பிடி' போடப்பட்டுள்ளதால், ஊர்க்காவல் படையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழக போலீசுக்கு உதவியாக செயல்படும் ஊர்காவல் படையில் பணிபுரிவோருக்கு தினமும், 560 ரூபாய் சம்பளம் என, மாதம், 5 நாளுக்கு பணி வழங்கப்பட்டது.
பணிக்கு வருவோர், 4 மணி நேரம் பணியாற்றினால் கூட, ஒரு நாள் சம்பளத்தை பெற்றனர். ஆனால் கடந்த ஜன., 25ல், ஊர்க்காவல் படை டி.ஜி.பி., ரவி, அனைத்து மாவட்ட எஸ்.பி., மாநகர போலீஸ் கமிஷனர்களுக்கு உத்தரவு பிறப்பித்தார்.
அதில், 'ஊர்க்காவல் படை வீரர்கள் பணிக்கு அழைக்கப்பட்டால், 8 மணி நேரம் பணிபுரிந்தால் மட்டும், 560 ரூபாய் வழங்க வேண்டும். குறைந்த நேரம் பணி புரிந்தால், 4 மணி நேரத்தை கணக்கிட்டு, 280 ரூபாய் வழங்க வேண்டும்.
'மாதம், 5 நாள் என்பதை, 10 நாளாக அதிகரித்து பணி வழங்கலாம். வி.ஐ.பி., வருகை, திருவிழா, இயற்கை பேரிடர் காலத்தில் ஊர்க்காவல் படையினரை அழைக்க நேரிட்டால், சிறப்பு பணி அழைப்புக்கு சென்னை தலைமையக அனுமதி பெற வேண்டும்' என தெரிவித்திருந்தார்.
இதனால், 8 மணி நேரம் பணிபுரிந்தால் மட்டும், 560 ரூபாயை பெற முடியும் என்ற நிலை, ஊர்க்காவல் படையில் பணிபுரிவோருக்கு ஏற்பட்டுள்ளது.
டி.ஜி.பி.,யின் உத்தரவால், தமிழகம் முழுதும் ஊர்காவல் படையில் பணிபுரியும், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.