மேட்டுப்பாளையம்:குருந்தமலை ரோட்டை, சீரமைக்க கோரி, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குருந்தமலையில் இருந்து, மங்களக்கரைக்கு தார் ரோடு உள்ளது. இதில் பாதியளவு தேக்கம்பட்டி ஊராட்சிக்கும், பாதியளவு காரமடை நகராட்சிக்கும் உட்பட்டதாகும்.
இந்த ரோடு வழியாக குருந்தமலை குழந்தை வேலாயுதசுவாமி கோவிலுக்கும் ஏராளமான பக்தர்கள் செல்கின்றனர். விவசாயிகள் காய்கறிகளை காரமடை மற்றும் மேட்டுப்பாளையம் மார்க்கெட்டுக்கும் கொண்டு செல்கின்றனர். இந்த ரோட்டிற்கு, 2010-11ம் ஆண்டில், எம்.எல்.ஏ., நிதியில் குருந்தமலையிலிருந்து மங்களக்கரை வரை புதிதாக தார் ரோடு போடப்பட்டது. கடந்த, 12 ஆண்டுகளுக்கு மேலாக, இந்த ரோட்டிற்கு, தார் ஏதும் போடாததால், தேக்கம்பட்டி எல்லை வரை, ஜல்லிக்கற்கள் பெயர்ந்து வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அதேபோன்று காரமடை நகராட்சி எல்லையில் உள்ள ரோட்டில், சில இடங்களில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்துள்ளது. பக்தர்களும், விவசாயிகளும் இவ்வழியாக வாகனங்களில் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர்.
எனவே காரமடை நகராட்சி நிர்வாகமும், தேக்கம்பட்டி ஊராட்சியும் இணைந்து, இந்த ரோட்டிற்கு தார்போட வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.