பெரம்பலுார்:'தனியார் கட்டுமான நிறுவனம், வாடிக்கையாளருக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்' என, அரியலுார் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை, கொளத்துாரைச் சேர்ந்தவர் மனோகரன். கடந்த 2012ம் ஆண்டு, அவர், வண்டலுார் அருகே அடுக்கு மாடி குடியிருப்பில் வீடு வாங்க, தனியார் கட்டுமான நிறுவனத்திடம், 6.44 லட்சம் முன்பணம், தவணை முறையில் 22 லட்சம் ரூபாயும் செலுத்தினார்.
ஒப்பந்தப்படி, 2014 நவம்பர் மாத இறுதியில், கட்டி முடிக்கப்பட்ட வீடு மனோகரனுக்கு ஒப்படைக்க வேண்டும்.
ஆனால், தனியார் கட்டுமான நிறுவனம் வீட்டை கொடுக்காமல், கூடுதலாக 2.60 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என கூறியது.
இதனால், அதிர்ச்சியடைந்த மனோகரன், 2017ல் சென்னை தெற்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில், கட்டுமான நிறுவனம் மீது வழக்கு தொடுத்தார்.
இந்த வழக்கு, கடந்த ஆண்டு ஜூலை மாதம் அரியலுார் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்துக்கு மாற்றப்பட்டது.
மனோகரன் இறந்து விட்டதால், அவரது மனைவி சுதா, 45, அந்த வழக்கை தொடர்ந்தார்.
விசாரித்த அரியலுார் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய நீதிபதி ராமராஜ் தலைமையிலான அமர்வு, கட்டுமான நிறுவனம், நான்கு வாரத்துக்குள் சுதாவிடம் வீட்டையும், இழப்பீடாக ஐந்து லட்சம் ரூபாயையும் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.