கோவை:மாவட்ட அளவில் பள்ளி சிறுவர்- சிறுமியர்களுக்கான தடகள போட்டியில், வீரர்கள் உற்சாகத்துடன் பங்கேற்று தங்களின் திறமையை வெளிப்படுத்தி அசத்தினர்.
'தி அமெச்சூர் அத்லெடிக் ஸ்போர்ட்ஸ் அசோசியேசன் ஆப் கோயம்புத்துார்' மற்றும் 'ஜி வரதராஜ் நினைவு ஸ்போர்ட்ஸ்' இணைந்து, 35வது 'கிட்டீஸ் அத்லெடிக் மீட்' பீளமேடு, பி.எஸ்.ஜி., மருத்துவ கல்லுாரி மைதானத்தில் நேற்று நடந்தது. இதில், 41 பள்ளிகளிலிருந்து, 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.நிகழ்ச்சியில், 'தி அமெச்சூர் அத்லெடிக் ஸ்போர்ட்ஸ் அசோசியேசன் ஆப் கோயம்புத்துார்' அமைப்பு செயலாளர் வெள்ளிங்கிரி வரவேற்புரை வழங்கினர்.
சிறப்பு விருந்தினராக ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்துாரின் தலைவர் சேஷநாராயணா பங்கேற்றார். ராஜ்ஸ்ரீ சுகர்ஸ் அண்ட் கெமிக்கல்ஸ் இயக்குனர் வரதராஜன், உடற்கல்வி ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
இப்போட்டியில் கோவை வருவாய் மாவட்டத்துக்கு உட்பட்ட பள்ளிகளை சேர்ந்த மாணவர்களுக்கு, 6, 8, 10 மற்றும் 12 வயது பிரிவுகளின் அடிப்படையில் 50மீ., 60மீ., 80மீ., 100மீ., 200மீ., 300மீ., 600மீ., ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், தொடர் ஓட்டம், 'சாப்ட் பால்' எறிதல், தடை ஓட்டம், குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தது.
நேற்று நடந்த போட்டியின் முடிவுகள் :
மாணவர்கள் பிரிவு
12 வயதுக்கு உட்பட்ட, 600மீ., ஓட்டத்தில் அட்ரின் ஜோ பிரான்சிஸ், தியானிஷ்; குண்டு எறிதலில் தாகின், ரவி பிரகாஷ் யாதவ்; 8 வயதுக்கு உட்பட்ட, 800மீ., ஓட்டத்தில் ஆரிக், மிருதுன் அஜய்; உயரம் தாண்டுதலில் சஞ்சய் பிரசாத், யுவன் பிரபாகரன்; 6 வயதுக்கு உட்பட்ட, 60மீ., ஓட்டத்தில் சிவகார்த்திகேயன், போயேரி டால்விக் தேஜ் ஆகியோர் முதல், இரண்டு இடங்களை பிடித்தனர்.
மாணவிகள் பிரிவு
6 வயதுக்கு உட்பட்ட, 60 மீ., ஓட்டத்தில் நியாஷினி, சேஷாஸ்ரீ; 'சாப்ட் பால்' எறிதலில் மியாலுபைசா, சேஷாஸ்ரீ ஆகியோர் முதல், இரண்டு இடங்களை பிடித்தனர். வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு சான்றிதழ், பதக்கங்கள் மற்றும் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.