கோவை:மாநில அளவிலான 'செபக்- டக்ரா' விளையாட்டு போட்டி அவிநாசிரோடு, பி.எஸ்.ஜி., தொழில்நுட்ப கல்லுாரி மைதானத்தில் நேற்று, துவங்கியது.
கோவை, பி.எஸ்.ஜி., தொழில்நுட்ப கல்லுாரியின் உடற்கல்வித்துறை சார்பில், '16வது பி.எஸ்.ஜி., கோப்பை'க்கான மாநில அளவில், 'செபக்- டக்ரா' போட்டி, கல்லுாரி மைதானத்தில் நேற்று துவங்கி, ஞாயிற்றுக்கிழமை நிறைவடைகிறது.
போட்டியை திருநெல்வேலி 'செபக்- டக்ரா' அசோசியேஷன் தலைவர் பேச்சிமுத்து துவக்கி வைத்தார். பி.எஸ்.ஜி., தொழில்நுட்ப கல்லுாரியின் உடற்கல்வி இயக்குனர் சோமசுந்திரமூர்த்தி உடனிருந்தார்.
கோவை, கேரளா, திருநெல்வேலி, சென்னை, ஆந்திரா, பி.எஸ்.ஜி., முன்னாள் அணி என, 17 அணிகள் பங்கேற்றுள்ளது.
வீரர்களுக்கான சீனியர் 'ரெகு', 'சீனியர் கோட்ரேன்ட்', ஜூனியர் ரெகு என, மூன்று பிரிவுகளில் போட்டி நடக்கிறது.
நேற்று நடந்த 'சீனியர் ரெகு' முதல் போட்டியில் திருநெல்வேலி நைட்ஸ் பரிக் அணி, 2-0 செட் கணக்கில் சென்னை கிங்ஸ் யுனைடெட் 'பி' அணியையும்; 2வது போட்டி பி.எஸ்.ஜி டெக் 'ஏ' அணி, 2-0 என்ற செட் கணக்கில் சென்னை கிங்ஸ் யுனைடெட் 'பி' அணியையும் வென்றது.
3வது போட்டியில் ஆந்திரா தண்டர் கே.சி., அணி, 2-0 என்ற செட் கணக்கில், கோழிக்கோடு சேன்டோஸ் 'ஏ' அணியையும்; 4வது போட்டியில் கிங்ஸ் யுனைடெட் 'ஏ' அணி, 2-0 என்ற செட் கணக்கில், பி.எஸ்.ஜி., முன்னாள் மாணவர்கள் அணியையும் வென்றது. வெற்றி பெற்ற அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது.