வடவள்ளி:முருகனின் ஏழாம் படைவீடாக மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் கருதப்படுகிறது. இக்கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த, 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
தைப்பூச திருவிழாவின் ஏழாம் நாளான இன்று, காலை, 7:00 மணி முதல் 8:30 மணிக்குள், திருக்கல்யாண உற்சவமும், பகல், 12:00 மணிக்கு, தைப்பூச தேரோட்டமும் நடக்கிறது.
இதற்காக, கோவில் நிர்வாகம், போலீசார், மாநகராட்சி, சோமையம்பாளையம் ஊராட்சி, மின்சார வாரியம், வனத்துறையினர் என அனைத்து துறைகளும் இணைந்து பல்வேறு முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளும், பக்தர்களுக்கு தேவையான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்தாண்டு தைப்பூச தேரோட்ட திருவிழாவிற்கு, லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால், மருதமலையில், 575 போலீசார் இன்று பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தைப்பூசத்தையொட்டி, நேற்று ஏராளமான பக்தர்கள் காவடி மற்றும் பால்குடம் எடுத்து பாதயாத்திரையாக மருதமலை கோவிலுக்கு வந்தனர்.
5ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதாலும், 4 மற்றும் 5ம் தேதிகளில், ஏராளமான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்ய வருவார்கள் என, எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இன்றும், நாளையும், அடிவாரத்தில் இருந்து மலைக்கு செல்லும் மலைப்பாதையில் வாகனங்கள் செல்ல அனுமதியில்லை என, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.