கோவை:''கோவை மாவட்டத்தில் தொழில்துறை வளர்ச்சியடைந்து வருகிறது; வேளாண் சாகுபடி பரப்பும் அதிகரித்துள்ளது,'' என, கலெக்டர் சமீரன் பெருமிதத்தோடு குறிப்பிட்டார்.
கோவை கலெக்டராக பணிபுரிந்த சமீரன், சென்னை மாநகராட்சியின் இணை கமிஷனராக (வளர்ச்சி பணிகள்) மாற்றப்பட்டிருக்கிறார். அவர், கோவையில் ஓராண்டு, 8 மாதங்கள் கலெக்டராக பணிபுரிந்திருக்கிறார். இக்கால கட்டத்தில் செய்த மேம்பாட்டு பணிகள் தொடர்பாக, அவரிடம் பேசினோம்.
கலெக்டர் சமீரன் கூறியதில் இருந்து...
கோவை மாவட்டத்தில் பிரதான பயிரான தென்னை, 2021-22 வரை, 89 ஆயிரத்து, 926 ஹெக்டேர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. 2022-23ல், கூடுதலாக 1,400 ஹெக்டேர் பரப்பு தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
கோவையில் இருந்து பழங்கள், ஆண்டுக்கு 2,000-2,500 மெட்ரிக் டன் அளவிலும், காய்கறிகள், தினமும், 200--250 மெட்ரிக் டன் அளவிலும் வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்படுகின்றன.
கள்ளப்பாளையம் மற்றும் மோப்பிரிபாளையத்தில், 'கொடீசியா' தொழிற்பேட்டைகள் செயல்பாட்டுக்கு வர உள்ளன. சொலவம்பாளையத்தில், 'கொசிமா' தொழிற்பேட்டை உருவாகி வருகிறது.
தங்க நகை கிளஸ்டர், தங்கம் ஹால்மார்க் கிளஸ்டர் ஆகிய குறுந்தொழில் குழுமங்கள் அமைக்கப்பட உள்ளன.
தென்னை நார் சார்ந்த தொழில்களை மேம்படுத்த,பல ஆண்டு கனவான 'தமிழ்நாடு கயிறு வணிக மேம்பாட்டு நிறுவனம்' துவக்கப்பட்டுள்ளது.
மத்திய - மாநில அரசுகளின் பங்களிப்புடன், தொழில்நுட்ப வளர்ச்சி மையம் (டெக்னாலஜி சென்டர்) ரூ.150 கோடியில் அரசூர் பகுதியில் நிறுவப்பட உள்ளது. குறு மற்றும் சிறு நிறுவனங்களுக்கான குழு சிறப்பாக செயல்பட்டதால், 2022ம் ஆண்டுக்கான தேசிய விருது கிடைத்தது, பணிக்கு ஊக்கமளிப்பதாக இருந்தது.
மிக முக்கியமாக, வன உரிமை பட்டா சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. தன்னார்வ தொண்டு அமைப்பினருடன் இணைந்து, 'நம்ம கோவை' திட்டங்கள், பிள்ளை கனி அமுது, குட்டி காவலர், போலாம் ரைட் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.
இவ்வாறு, சமீரன் கூறினார்.
சமீரன் மேலும் கூறுகையில், ''கோயம்புத்துார் என்ற பெயரைக் கேட்டதும், நினைவுக்கு வருவது கொங்கு தமிழும், சிறுவாணி தண்ணீரும்தான். கோடையிலும் இதம் தரும் பருவநிலை, ஏனுங்க-... வாங்க-... போங்க... என மரியாதை கலந்த பேச்சு வழக்கு, விருந்தோம்பல் மிகவும் பிடிக்கும்,'' என்றார்.