கோவையில் தினமும் ஆயிரக்கணக்கான ஆபரேஷன்கள் நடக்கின்றன. இவற்றுக்காக பல ஆயிரம் யூனிட் ரத்தம் தினமும் தேவைப்படுகிறது.
ஆனால் கோவையில் சமீபகாலமாக ரத்ததானம் செய்வோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அதனால் தேவைக்கேற்ற நேரத்தில், தேவைப்படும் ரத்த வகை கிடைப்பது அரிதாகிறது. ரத்ததானம் செய்வது, ஓர் உயிரைக் காக்கின்ற மகத்தான வாய்ப்பாகும். ரத்ததானம் செய்வதால் யாருக்கும் உடல் நலம் பாதிப்படையாது. மாறாக புதிய ரத்தம் ஊற்றெடுக்கும்.
ரத்தம் என்பது நம் உடலில் ஓடும் மருத்துவ திரவம்தான். நம் நுரையீரலில் இருந்து நாம் உயிர் வாழ்வதற்குத் தேவையான பிராண வாயுவை நம் உடலில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு எடுத்துச் செல்வதோடு, உடலில் உள்ள கழிவுப் பொருட்களை வெளியேற்றும் முக்கியப் பொருளாகும்.
ஒவ்வொருவரின் உடலிலும் ஐந்து லிட்டர் ரத்தம் உள்ளது. ரத்ததானத்தின்போது, 350 மில்லி லிட்டர் ரத்தம் மட்டுமே எடுக்கப்படும். அந்த ரத்தத்தை நம் உடல் 24 மணி நேரத்தில் ஈடு செய்து விடும். அதனால் மூன்று மாதத்துக்கு ஒரு முறை ரத்ததானம் செய்யலாம். குருதிக்கொடை அளிக்க 20 நிமிடங்களே ஆகும். அன்றே நம் அன்றாட வேலையைச் செய்யலாம்.
பதினெட்டு வயதிலிருந்து 65 வயது வரையுள்ள யாரும் ரத்ததானம் செய்யலாம்; எடை குறைந்தது 45 கிலோ இருப்பது அவசியம். ரத்த அழுத்தம் சீராக இருக்க வேண்டும். ஹீமோகுளோபின் 12.5 g/dl க்கு மேல் இருக்க வேண்டும்.
சமீபத்தில் நோய் வாய்ப்பட்டிருக்கக் கூடாது. கடந்த ஓராண்டுக்குள் மஞ்சள் காமாலை வந்திருக்கக் கூடாது; ஆபரேஷன் செய்திருக்கக் கூடாது. எச்.ஐ.வி., மற்றும் பால்வினை நோய் இருந்தால் ரத்ததானம் செய்யக்கூடாது. ரத்ததானம் செய்த பின், கால் மணி நேரமாவது ஓய்வெடுக்க வேண்டும்.
முக்கியமான குறிப்பு: சமீபத்தில் டாட்டூ அல்லது பச்சை குத்தியிருப்பவர்கள், ரத்ததானம் செய்யக்கூடாது. அதேபோல, மது அருந்தியிருக்கக் கூடாது.
சிறப்பு பலன்கள்; ரத்ததானம் செய்வது மாரடைப்பை குறைக்கும்; புதிய ரத்த அணுக்கள் உருவாகும். ரத்ததானம் செய்வதால், ஒருவரின் உடலில் 500 கலோரிக்கும் மேல் எரிக்கப்படும்.
ஆரோக்கியமானவர்கள் ரத்ததானம் செய்ய எதுவுமில்லை தடை...துணிவுடன் தரலாம் குருதிக்கொடை!