கோவை:கோவை மாநகராட்சிக்கு சொந்தமான இடத்துக்கு போலி ஆவணம் சமர்ப்பித்து பெறப்பட்ட வரன்முறை உத்தரவை, கமிஷனர் பிரதாப் ரத்து செய்தார்.
கோவை மாநகராட்சிக்கு சொந்தமான பொது ஒதுக்கீட்டு இடங்களுக்கு (ரிசர்வ் சைட்) போலி ஆவணம் தயாரித்து, விற்பனை செய்வது அடிக்கடி நடந்து வருகிறது. இதை தடுக்க, பொது ஒதுக்கீடு இடங்களை கண்டறிந்து, ஆவணப்படுத்தும் வேலைகள், நகரமைப்பு பிரிவினரால்மேற்கொள்ளப்படுகிறது.
இதில், 39வது வார்டில் உள்ள மருத நகர், 7.39 ஏக்கர் பரப்பு கொண்டது. பொது பயன்பாட்டுக்காக, 69 சென்ட் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. மாநகராட்சிக்கு சொந்தமான இவ்விடத்தில், 12 சென்ட் பரப்புக்கு போலி ஆவணம் தயாரித்து, ஒருவர், மனை வரன்முறை பெற்றிருப்பது, மாநகராட்சி கமிஷனர் பிரதாப் கவனத்துக்கு தெரியவந்தது.
அவர் விசாரணை நடத்தியதில், வீரகேரளம் கிராமம், மருத நகரில், மாநகராட்சிக்கு சொந்தமான 238.29 சதுர மீட்டர் பொது ஒதுக்கீடு இடத்துக்கு போலி ஆவணங்கள் சமர்ப்பித்து, மனை வரன்முறை செய்திருப்பதை கண்டுபிடித்தார். மனை வரன்முறை செய்த உத்தரவை உடனடியாக ரத்து செய்து, அறிவிப்பு பலகை வைக்கவும், பத்திரப்பதிவு துறைக்கு தகவல் தெரிவித்து, பதிவை ரத்து செய்ய தேவையான நடவடிக்கை எடுக்கவும் நகரமைப்பு பிரிவினருக்கு, மாநகராட்சி கமிஷனர் பிரதாப் உத்தரவிட்டார்.
இதையடுத்து, ஆக்கிரமிப்பாளரால் வைக்கப்பட்டிருந்த அறிவிப்பு பலகையை மாநகராட்சி அலுவலர்கள் அகற்றினர். மாநகராட்சியால் மீட்கப்பட்ட இடத்தின் மதிப்பு, 2.5 கோடி ரூபாய் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதுபோல், மாநகராட்சியால் மீட்கப்படும் இடங்களில் சிறிய அளவில் 'பிளக்ஸ் போர்டு' வைக்கப்படுகிறது; நாளடைவில் சிதிலமடைந்து காணாமல் போய் விடுகிறது. அதிகாரிகள் கண்காணிப்பு இல்லாத சமயங்களில் மீண்டும் ஆக்கிரமிப்பில் சிக்குகிறது. எனவே, சுற்றிலும் கம்பி வேலி அமைத்து, பெயிண்டால் எழுதி, அறிவிப்பு பலகை வைக்க வேண்டுமென்கிற கோரிக்கை எழுந்துள்ளது.