கோவை:மத்திய அரசு பட்ஜெட் தாக்கலாகியுள்ள நிலையில், வரும் நிதியாண்டில் கோவையின் கட்டமைப்பு மேம்பாட்டுக்கு என்னென்ன திட்டங்கள் வரும், எது எதற்கு நிதி ஒதுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன் வரையிலும், ரயில்வே பட்ஜெட் தனியாக தாக்கலான போது, ஒவ்வொரு நகருக்குமான ரயில்வே கட்டமைப்பு திட்டங்களும், புதிய ரயில்களும் அறிவிக்கப்படுவது வழக்கமாக இருந்தது. கடந்த சில ஆண்டுகளாக எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு என்பது மட்டுமே, பட்ஜெட்டில் குறிப்பிடப்படுகிறது
அதன் பின்பு, அந்த நிதியிலிருந்து வெவ்வேறு பகுதிகளுக்கும் வெவ்வேறு திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன.
வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், ரயில்வே துறைக்கு ரூ.2.41 லட்சம் கோடியும், நெடுஞ்சாலைத் துறைக்கு ரூ.2.70 லட்சம் கோடியும், நகர்ப்புற கட்டமைப்பு மேம்பாட்டுக்கு 10 ஆயிரம் கோடி ரூபாயும், போக்குவரத்து திட்டங்களுக்கு 75 ஆயிரம் கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிதியிலிருந்து கோவையின் ரயில்வே தேவைகளுக்கும், கட்டமைப்பு மேம்பாட்டுக்கும், போக்குவரத்து திட்டங்களுக்கும் எவ்வளவு நிதி கிடைக்குமென்ற விவாதம் சூடு பிடிக்கத் துவங்கியுள்ளது.
கோவை சர்வதேச விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்குத் தேவையான நிலம் கையகப்படுத்தும் பணியை, தமிழக அரசு விரைவில் நிறைவு செய்து, விமான நிலைய ஆணையத்திடம் ஒப்படைக்கவுள்ளது.
அதனால் இந்த ஆண்டில் கோவை விமான நிலையத்தை சர்வதேச தரத்தில் விரிவாக்கம் செய்வதற்கு, பெருமளவு நிதி ஒதுக்கி, பணியைத் துவக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பு, கொங்கு மண்டலத்துக்குட்பட்ட ஏழெட்டுமாவட்ட மக்களின் எதிர்பார்ப்பாகவுள்ளது.
அதேபோன்று, நெடுஞ்சாலைத்துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியில், கோவைக்கு புதிய பாலங்கள், புதிய பை-பாஸ், எல் அண்ட் டி பை பாஸ் விரிவாக்கம், போன்ற திட்டங்களுக்கு நிதி ஒதுக்க வேண்டுமென்று, கோவையின் தொழில் அமைப்புகளின் நிர்வாகிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
ரயில்வே துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியில், கோவை ரயில்வே ஸ்டேஷன் மறு சீரமைப்பு, தென் மாவட்ட நகரங்களுக்குக் கூடுதல் ரயில்கள் போன்ற திட்டங்களை, மத்திய அரசு இந்த ஆண்டே செயல்படுத்த வேண்டு மென்பதும் தொழில் அமைப்பினர் மற்றும் பொதுமக்களின் ஒருமித்த கோரிக்கையாகவும், எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது.
இவற்றைத் தவிர்த்து, கோவையின் தொழில் வளர்ச்சிக்கு உதவும் வகையில், மத்திய அரசு சில திட்டங்களை அறிவிக்கும் என்ற நம்பிக்கையும் இங்குள்ள தொழில் அமைப்பினரிடம் உள்ளது. அடுத்த ஆண்டில் லோக்சபா தேர்தலில், கோவையில் பா.ஜ.,கட்சி போட்டியிடுவது நுாற்றுக்கு நுாறு உறுதியாகி விட்ட நிலையில், இந்த ஆண்டில் கோவைக்கு பல சிறப்பான திட்டங்களை மத்திய அரசு அறிவிப்பதுடன், பெருமளவு நிதி ஒதுக்கவும் வாய்ப்புள்ளதாக நம்பப்படுகிறது.
தி.மு.க.,வும் கோவை தொகுதியை குறி வைத்திருப்பதால், தமிழக பட்ஜெட்டில் கோவைக்கென சிறப்புத் திட்டங்கள், நிதி ஒதுக்கீடு அறிவிப்புகள் வரவும் வாய்ப்பு அதிகமுள்ளது.
இந்த இரண்டு அரசுகளில் எந்த அரசு கூடுதல் திட்டங்களை அறிவித்துச் செயல் படுத்துகிறதோ, அதுவே அடுத்த ஆண்டில் நடக்கும் லோக்சபா தேர்தலில் ஓட்டுக்களாக அறுவடையாகும் என்பதால், இந்த ஆண்டில் கோவைக்கு பல நன்மைகள் வந்து சேருமென்ற நம்பிக்கை பிறந்துள்ளது. இது ஜெயிக்குமா என்பது சில மாதங்களில் தெரிந்து விடும்.