மதுரை:மதுரை தெற்குவாசலில், பட்டப்பகலில், காதல் மனைவியை குத்திக் கொலை செய்து தப்பிய கணவனை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை தெற்குவாசல், சப்பாணி கோவில் தெருவைச் சேர்ந்தவர் மீனாட்சிசுந்தரம். இவரது இளைய மகள் வர்ஷா, 19. நேற்று மதியம் வீட்டருகே உள்ள கடைக்கு சென்றார்.
அப்போது, 'ஹெல்மெட்' அணிந்து, 'டூ - வீலரில்' வந்த நபர், வர்ஷாவின் தலைமுடியை பிடித்து இழுத்து, கத்தியால் வாய்ப்பகுதி மற்றும் காலில் குத்திவிட்டு தப்பினார்.
ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை, அருகில் உள்ளவர்கள் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியில் வர்ஷா இறந்தார்.
முதற்கட்ட விசாரணையில், வர்ஷாவின் கணவர் பழனி, 28, இந்த கொலையை செய்தது தெரிந்தது. அவரது 'மொபைல் போன், சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டு உள்ளது. போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
கொலை குறித்து போலீசார் கூறியதாவது:
பழனி எம்.பி.ஏ., படித்த போது, வர்ஷாவின் அக்காவை ஒருதலையாக காதலித்து, 'டார்ச்சர்' கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக பழனி மீது, 2021ல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அவரை பழிவாங்க நினைத்து, வர்ஷாவை பழனி காதலித்தார். அக்காவை காதலித்தவர் எனத் தெரிந்தும், அவரை வர்ஷா காதலித்தார்.
வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த இருவரும், கடந்த செப்டம்பரில் திண்டுக்கல்லில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.
பின்னர், மதுரை நகர் மகளிர் போலீசாரிடம் தஞ்சம் அடைந்தனர். பெற்றோரும், போலீசாரும் அறிவுறுத்தியும், அதை பொருட்படுத்தாமல், வர்ஷா பழனியுடன் குடும்பம் நடத்தினார்.
பின், 40 நாட்களில் பழனியின் நடவடிக்கை பிடிக்காததால், தந்தை வீட்டிற்கு திரும்பினார்.
இதனால், மகளிர் போலீசில் பழனி புகார் செய்தார்.
போலீசார் சமரசம் செய்தனர். ஆனாலும், கணவரை பிரிந்து தந்தை வீட்டிலேயே வர்ஷா இருந்தார்.
இந்நிலையில், நேற்று கடைக்கு வந்தபோது வர்ஷா குத்திக்கொலை செய்யப்பட்டார்.
இவ்வாறு போலீசார் கூறினர்.
மதுரை நகரில் ஜன., 31ல் சோலையழகுபுரத்தில் நகைக்கடை உரிமையாளர் மணிகண்டன், 44, வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலை, 6 லட்சம் ரூபாய் கடனை திருப்பித்தராதது உள்ளிட்ட பிரச்னைகளால் கூலிப்படையை ஏவி நடந்தது தெரியவந்தது. ஜெய்ஹிந்த்புரம் போலீஸ் ஏட்டு ஹரிஹரபாபு உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டனர்.பிப்., 1 இரவு தென்பரங்குன்றம் பகுதியில் டைல்ஸ் தொழிலாளி சுரேஷ், 39, வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில், நேற்று வர்ஷா கொலை செய்யப்பட்டுள்ளார்.போலீசார் கூறுகையில், 'மூன்று கொலைகளுமே தனிப்பட்ட காரணங்களுக்காக நடந்தவை. கொலையாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். விரைவில் கைது செய்யப்படுவர்' என்றனர்.