கோவை:தமிழகம், கேரளாவில் ஒரு லட்சம் பேரிடம் மோசடி செய்த நிதி நிறுவனம் மீது இதுவரை, 700 பேர் மட்டுமே புகார் அளித்து உள்ளனர்.
கோவையை தலைமையிடமாக வைத்து, 'டிரீம் மேக்கர்ஸ் குளோபல் பிரைவேட் லிமிடெட்' என்ற நிதி நிறுவனம் சில ஆண்டுகளுக்கு முன் செயல்பட்டது.
சாய்பாபா காலனியைச் சேர்ந்த சதீஷ் குமார், 42, அவரது மனைவி குணவதி, 39, ஆகியோர் இந்த நிறுவனத்தை, 2017ல் தொடங்கி நடத்தினர்.
அதிக வட்டி தருவது உள்ளிட்ட பொய்யான வாக்குறுதிகளை கூறி, தமிழகம், கேரளாவில் பல நுாறு கோடி ரூபாய் முதலீடுகளை பெற்றனர்.
அவர்கள் கூறியதை நம்பி, இரு மாநிலங்களிலும் ஒரு லட்சம் பேர் பணம், 'டிபாசிட்' செய்தனர். அதை பெற்றுக்கொண்ட நிதி நிறுவனத்தினர் உறுதி கூறியபடி வட்டி, அசல் தராமல் ஏமாற்றி விட்டனர்.
இது தொடர்பான புகார்களை விசாரித்த கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், மோசடி தம்பதியை, 2019ல் கைது செய்தனர்.
மோசடி நிறுவனத்தின் வங்கிக் கணக்குகளில் இருந்த, 75 கோடி ரூபாய் முடக்கப்பட்டது.
அசையா சொத்துக்களும் கண்டறியப்பட்டன. எனினும், பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் பலரும் புகார் கொடுக்க முன்வரவில்லை. இதுவரை வெறும், 700 பேர் மட்டுமே புகார் கொடுத்து உள்ளனர்.
இந்த நிறுவனத்தால் மதுரை, ராமநாதபுரம், துாத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்தோர் அதிக எண்ணிக்கையில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எங்களை அழைக்கலாம்!
'அவர்கள் உடனடியாக, கோவை பொருளாதார குற்றப்பிரிவை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கும் பட்சத்தில், பணம் திரும்ப கிடைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என, போலீசார் தெரிவித்து உள்ளனர்.
மேலும் விபரங்களுக்கு, 94981 72395, 94981 74462, 94981 15106 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என, கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சதீஷ் குமார், ஜாமினில் வெளிவந்த நிலையில், சில நாட்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார்.