கோவை:கோவையில் எதிர்வரும் 5 நாட்களுக்கு வானம் லேசான மேக மூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான துாறல் மழை எதிர்பார்க்கப்படுவதாக வேளாண் பல்கலை கால நிலை ஆராய்ச்சி மையம் கணித்துள்ளது.
கோவையில் எதிர்வரும் 5 நாட்களில், அதிகபட்சமாக 30 டிகிரி முதல் 31 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை இருக்கும். குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி முதல் 21 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். இந்நிலையில், வறண்ட வானிலை தொடர்வதால், மண் ஈரத்தினை பொறுத்து மாலையில் நீர் பாசனம் செய்ய வேண்டும். பயிர் கழிவு மூடாக்கு இடுவதால் மண் ஈரத்தினை பாதுகாக்கலாம்.
கரும்பு நடவை பொறுத்தவரை, இளங்குருத்து புழு வர வாய்ப்புள்ளது. எனவே, விவசாயிகள் அடிக்கடி தண்ணீர் பாய்ச்சி வயலை நன்கு ஈரமாக வைத்துக் கொள்வதன் மூலம் இந்த தாக்குதலை குறைக்கலாம். வாழையில் சில இடங்களில் வாடல் நோய் காணப்பட்டால், நோய் அதிகமாக பாதித்திருந்த மரத்தை அகற்றி விட்டு சுண்ணாம்பு இடவும்.மஞ்சள் கிழங்கு முதிர்வடையும் நிலையில் இருப்பதால் இடைவெளியினை அதிகரித்து அளவான தண்ணீர் பாய்ச்சவும்.
மரவள்ளி கிழங்கில் வெள்ளை ஈ தாக்குதல் வர வாய்ப்புள்ளது, எனவே நன்கு கண்காணித்து மஞ்சள் ஒட்டுபொறி வைத்து 5 அல்லது 6 இடங்களில் வைக்கவும். தேவைப்பட்டால் டையோசோபாஸ் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மில்லி அல்லது இமிடோகுளோரோபிட் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 0.6 மில்லி வீதம் கலந்து தெளிக்கவும்.
தென்னை மரத்தில் தற்போது நிலவும் சூழ்நிலையால் இலைகருகல் நோய் வர வாய்ப்புள்ளது. கார்பன்டசிம் மருந்தை 100 மில்லி தண்ணீருக்கு 2 கிராம் என்ற அளவில் கலந்து வேர் மூலம் செலத்தவும். கால்நடைகளை பொறுத்தவரை கறவை மாடுகளில் மடிவீக்க நோய் பரவ வாய்ப்புள்ளது. எனவே ஒரு சதம் பொட்டாசியம் பெர்மாங்கனேட் கரைசலை கொண்டு பால் கறப்பதற்கு முன்னும் பின்னும் மடியை சுத்தம் செய்யவும். இவ்வாறு, விவசாயிகளுக்கு வேளாண் பல்கலை கால நிலை ஆராய்ச்சி மையம் அறிவுறுத்தியுள்ளது.