கோவை:கோவை, செல்வபுரத்தில், ஒரு கிடங்கில் வைத்திருந்த ஒரு டன் பிளாஸ்டிக் பொருட்கள் நேற்றிரவு பறிமுதல் செய்யப்பட்டன. கிடங்கு உரிமையாளருக்கு, 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க, கோவை மாநகராட்சியில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அக்குழுவினர் நகரெங்கும் திடீர் ஆய்வு செய்து, பறிமுதல் செய்து வருகின்றனர். தடையை மீறி விற்பனை செய்யும் கடைக்காரர்களுக்கு அபராதம் விதிக்கின்றனர்.
மத்திய மண்டலம், 80வது வார்டு, செல்வபுரம் பகுதியில் ஒரு கிடங்கில் பிளாஸ்டிக் பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. நோடல் ஆபீசர் சலேத், சுகாதார மேற்பார்வையாளர் மது செல்வன் தலைமையிலான குழுவினர் நேற்றிரவு திடீர் ஆய்வு செய்தனர். அங்கு, ரூ.1.20 லட்சம் மதிப்பிலான ஒரு டன் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். கிடங்கு உரிமையாளருக்கு, 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
பறிமுதல் செய்த பிளாஸ்டிக் பொருட்களை பார்வையிட்ட, மாநகராட்சி கமிஷனர் பிரதாப், அவற்றை கணக்கிட்டு, பதிவேட்டில் குறிப்பிட்டு, மாநகராட்சி அலுவலகத்தில் பாதுகாப்பாக வைத்து, சீலிட உத்தரவிட்டார். இவற்றை துகள்களாக்கி, சிமென்ட் தொழிற்சாலைக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாக, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.