சூலூர்:சுல்தான்பேட்டை அருகே பி.ஏ.பி., வாய்க்காலில் மூழ்கி இருவர் பலியாகினர்.
சுல்தான்பேட்டை அடுத்த பெரிய குயிலியை சேர்ந்த நடராஜன் மகன் மகாலிங்கம், 37. விவசாயி. இவர் பெரிய குயிலியை சேர்ந்த விஜயகுமார் என்பவரது தலைமையில் கடந்த, பிப்., 1 ம்தேதி பழநிக்கு பாதயாத்திரை புறப்பட்டனர்.
30 பெண்கள் உட்பட, 110 பேர் பழநிக்கு சென்றனர். நேற்று முன் தினம் பச்சாக்கவுண்டன் - நகர களந்தை ரோட்டில் உள்ள பி.ஏ.பி., வாய்க்கால் பாலம் அருகே சென்றபோது, யாத்திரை குழுவில் உள்ள, பெரிய குயிலியை சேர்ந்த செந்தில்குமார் மகன் கோபிநாத், 17, பி.ஏ.பி., வாய்க்கால் படிக்கட்டில் அமர்ந்து குளித்தபோது, தவறி வாய்க்காலில் விழுந்து தத்தளித்தார். அதை பார்த்த மகாலிங்கம், கோபிநாத்தை காப்பாற்ற வாய்க்காலில் குதித்துள்ளார். நீரின் வேகம் அதிகம் இருந்ததால், இருவரும் இழுத்து செல்லப்பட்டனர். தகவல் அறிந்த சுல்தான்பேட்டை போலீசார், சூலூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
வீரர்கள் வந்து இருவரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், காமநாயக்கன் பாளையம் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் கோபிநாத்தின் உடல் நேற்று மீட்கப்பட்டது. மகாலிங்கத்தின் உடல் சுல்தான்பேட்டை போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நேற்று மீட்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து, காமநாயக்கன்பாளையம், சுல்தான்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.