பழநி:''100 ஆண்டு பழமையான கோயிலை இடித்தேன் எனக்கூறும் டி.ஆர்.பாலு, பிற மத வழிபாட்டு தலங்களை இடித்தேன் என கூற தைரியம் உண்டா என பா.ஜ., தேசிய மகளிரணி தலைவி வானதி கேள்வி எழுப்பினார்.
பழநியில் அவர் கூறியதாவது: ஆஸ்திரேலியா, கனடா, ஜப்பான் போன்ற நாடுகளில் பணவீக்கம் அதிகரித்து வருகிறது.
அண்டை நாடுகளில் உணவு தானிய பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அவர்களால் பெட்ரோல், டீசல் வாங்க இயலவில்லை. மத்திய அரசு எட்டு ஆண்டுகளாக சிறப்பான பட்ஜெட்டை வழங்கி வருகிறது.
இந்த ஆண்டுக்கான பட்ஜெட் அனைத்து தரப்புக்குமான சிறந்த பட்ஜெட். ஈரோடு இடைத்தேர்தலில் மத்திய தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம். பழநி மலை முருகன் கோயில் கும்பாபிஷேகம் அவசரமாக நடந்துள்ளதாக கூறுகின்றனர்.
கடவுள் மீது நம்பிக்கை இல்லை என்பவர்கள்தான் கும்பாபிஷேகத்தன்று உறவினர்களையும், குடும்பத்தாரையும் கோயிலுக்கு அழைத்து வந்து உள்ளனர்.
கோயிலுக்கு வரும் போது சுயநலமாகவும், கோயிலுக்கு வெளியே சிறுபான்மையினரின் ஓட்டுக்காக ஹிந்து மதத்திற்கு எதிராகவும் பேசுகின்றனர்.பழமையான கோயில்களை பாதுகாக்க வேண்டும்.
100 வருட கோயிலை இடித்தேன் என தி.மு.க., எம்.பி. டி.ஆர்.பாலு பெருமையுடன் கூறுகிறார்.
மற்ற மதங்களின் வழிபாட்டுத் தலங்களை இடித்தோம் என கூற, அகற்ற சொல்ல தைரியம் உள்ளதா.
இதுபோல் பாரபட்சமாக செயல்படுவதை கண்டிக்கிறோம், என்றார்.