கோவை:கோவை மாநகராட்சியின் அனைத்து சேவைகளையும் ஒரே இடத்தில் இருந்து கண்காணித்து, கட்டளைகள் பிறப்பிக்கும் வகையில், கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சியின் அனைத்து விதமான பணிகளையும் ஒரே கூரையின் கீழ் கண்காணித்து, நடவடிக்கையை துரிதப்படுத்தும் வகையில், 'ஸ்மார்ட் சிட்டி' நிதியில் ரூ.14.11 கோடியில் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம், ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கு வளாகத்தில் அமைக்கப்பட்டு உள்ளது.
கம்ப்யூட்டர்கள் பொருத்தப்பட்டு, மாநகராட்சியின் சேவைகள் அனைத்தும் படிப்படியாக பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. மிக முக்கியமாக, குப்பை அள்ளிச் செல்லும் வாகனங்களின் இயக்கத்தை முறைப்படுத்தவும், டீசல் செலவை குறைக்கவும் திட்டமிட்டு, அனைத்து வாகனங்களுக்கும் ஜி.பி.எஸ்., கருவி பொருத்தப்பட்டு, 'ஜியோ பென்சிங்' நடைமுறை பின்பற்றப்படுகிறது. ஜி.பி.எஸ்., கருவி பொருத்தப்பட்ட வாகனங்கள் ஒவ்வொன்றுக்கும் 'ரூட் மேப்' வழங்கப்பட்டிருக்கிறது;
அதன்படியே அவ்வாகனத்தை இயக்க வேண்டும். வேறு வழித்தடத்தில் இயக்கினாலோ அல்லது, ஒரே இடத்தில் அதிகமான நேரம் நின்றிருந்தாலோ, கட்டுப்பாட்டு அறைக்கு தெரியும். சம்பந்தப்பட்ட வாகன எண் மூலம் டிரைவரை கண்டறிந்து, தொலைபேசியில் தொடர்பு கொண்டு விபரம் சேகரிக்கப்படுகிறது.
பில்லுாரில் அணையில் எடுக்கப்படும் குடிநீர், சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து சப்ளையாகும் அளவு, நீர் வரத்து உள்ளிட்ட விவரங்கள் 'ஸ்கேடா' தொழில்நுட்பம் மூலம் கண்காணிக்கப்படுகிறது. இத்தகவலும், கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்க வசதி செய்யப்பட்டு உள்ளது.
'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் மேம்படுத்தியுள்ள குளக்கரைகள் மற்றும் பூங்காக்களில் 'சிசி டிவி' கேமரா மற்றும் ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்டுள்ளன. குளக்கரையில் நடக்கும் நிகழ்வுகளை கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிப்பதோடு, உத்தரவுகள் பிறப்பிக்க 'ஸ்பீக்கர்' வசதி செய்யப்பட்டிருக்கிறது.
அடுத்த கட்டமாக, பிரதான ரோடுகள் மற்றும் அனைத்து வார்டுகளில் பொருத்தியுள்ள தெருவிளக்குகள் எரிகிறதா, எரிய வில்லையா என்பதை கண்காணிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும், பஸ் ஸ்டாப் கூரைகள் மற்றும் ரேஸ்கோர்ஸ் மீடியா டவர் மற்றும் மாதிரி சாலைகளில் அமைத்துள்ள 'டிஜிட்டல் ஸ்கிரீனில்' விளம்பரம் செய்வது மற்றும் கண்காணிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
இவற்றில் மிக முக்கியமாக, 'ஸ்மார்ட் வருகை பதிவேடு' கையாள திட்டமிடப்பட்டுள்ளது. 100 வார்டு அலுவலகங்கள், 5 மண்டல அலுவலகங்கள் மற்றும் மாநகராட்சி பிரதான அலுவலகம் சேர்த்து, 106 இடங்களில் கருவிழி ஸ்கேன் கருவிகள் பொருத்தப்பட உள்ளன. மாநகராட்சி ஊழியர்கள், அதிகாரிகள், துாய்மை பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரின் வருகையும் கருவிழி ஸ்கேனிங் மூலம் உறுதிப்படுத்தப்படும். இதன் ஒட்டுமொத்த தகவலும் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்க முடியும்.
இதுதொடர்பாக, மாநகராட்சி கமிஷனர் பிரதாப் கூறுகையில், ''மாநகராட்சியால் வழங்கப்படும் அனைத்து சேவைகளையும் ஒரே இடத்தில் இருந்து ஒருங்கிணைத்து, கட்டளைகள் பிறப்பிக்கும் வகையில் வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. வரியினங்கள், வாடகை செலுத்தாதவர்களை கூட கண்டறிய முடியும். மார்ச், 15க்குள் அனைத்து பணிகளையும்முழுமையாக முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது,'' என்றார்.