கோவை:கோவை ஆத்துப்பாலத்தில் செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றங்களால் வாகன நெரிசல் குறைந்துள்ளது. வாகன போக்குவரத்து சீராக செல்வதற்கு, கரும்புக்கடை, ஆத்துப்பாலம், புட்டுவிக்கி பிரிவில் கூடுதல் போலீசார் பணி அமர்த்தப்பட வேண்டும்.
தென் மாவட்டங்களில் இருந்தும், கேரளாவில் இருந்தும், கோவை மாநகருக்குள் செல்வதற்கான பிரதான நுழைவாயிலாக கோவை ஆத்துப்பாலம் உள்ளது. தற்போது இங்கு பாலம் கட்டும் பணி நடப்பதால் எந்த நேரமும் வாகன நெரிசல் இருந்து வருகிறது.
இதற்கு தீர்வாக போலீசார் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர், போக்குவரத்து மாற்றத்தை நேற்று முன்தினம் அமல் செய்தனர்.
அதன்படி, பாலக்காடு சாலையில் வரும் கனரக வாகனங்கள் அனைத்தும், கோவைபுதுார் பிரிவு வழியாகவும், புட்டுவிக்கி சாலை வழியாகவும், திருப்பி விடப்படுகின்றன.
பொள்ளாச்சி சாலையில் வரும் இலகு ரக வாகனங்கள், நேரடியாக ஆத்துப்பாலத்தில் வலதுபுறமாக செல்ல முடியாதபடி தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது.இந்த வாகனங்கள், குனியமுத்துார் செல்லும் சாலையில், மின் மயானம் வரை சென்று, அங்கிருந்து 'யூ டர்ன்' எடுத்து மீண்டும் ஆத்துப்பாலம் நோக்கி செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.
பாலம் கட்டுமானப் பணிக்காக சாரம் அமைக்கப்பட்டுள்ளதால், கரும்புக்கடை பஸ்ஸ்டாப்பில்வாகன போக்குவரத்துக்கான பாதை குறுகலாக உள்ளது. அங்கு ஏற்படும் நெரிசலுக்கு இதுவே காரணம் என்று உணர்ந்த போலீசார், உக்கடம் நோக்கி வரும் இரு சக்கர வாகனங்களை மட்டும், கரும்புக்கடையில் இருந்து இடதுபுறம் மசூதி வழியாக திருப்பி விடுகின்றனர்.
இந்த மாற்றங்களால் நேற்று ஆத்துப்பாலத்தில் பகல் நேரத்தில் நெரிசல் குறைந்து காணப்பட்டது.
போக்குவரத்தும் தடையின்றி சென்று வந்தது.நெரிசல் வேளைகளில், கரும்புக்கடையில் மட்டும் வாகனங்கள் தேங்குவதை காண முடிந்தது.
அதை தவிர்க்க, கரும்புக்கடை, அங்குள்ள இடது புற பாதை, ஆத்துப்பாலம் மற்றும் புட்டுவிக்கி பிரிவில் கூடுதல் போலீசார் பணி அமர்த்தப்பட வேண்டும்.
நெரிசல் வேளைகளில் மட்டும், கார்களையும் புட்டுவிக்கி பிரிவு வழியாக செல்வதற்கு போலீசார் ஏற்பாடு செய்தால், வாகன நெரிசலை இன்னும் குறைக்க முடியும்.