ஓசூர்:சூளகிரி அருகே, கோபசந்திரத்தில் நடந்த எருது விடும் விழாவில் ஓடிய காளை, தென்பெண்ணை ஆற்றில் விழுந்து பலியானது.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகா, கோபசந்திரம் பகுதியில் சாலை மறியல் மற்றும் கலவரத்திற்கு மத்தியில், எருது விடும் விழாவும் நடந்து முடிந்தது.
சூளகிரி, பேரிகை, தேன்கனிக்கோட்டை, ஓசூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து வந்த காளைகள், விழா திடலில் அவிழ்த்து விடப்பட்டன.
அப்போது, விழா திடலில் ஓடிய காளை ஒன்று, உரிமையாளருக்கு அகப்படாமல் வேகமாக ஓடி, அருகிலிருந்த தென்பெண்ணை ஆற்றில் விழுந்தது. ஓடிய வேகத்தில் நீந்த முடியாததால் தண்ணீரில் மூழ்கியது.
உடனடியாக மாடு பிடி வீரர்கள் காளையை மீட்க முயன்றனர். எனினும், அந்த மாடு தண்ணீரில் மூழ்கி பலியானது.
இதையடுத்து, மாட்டின் சடலத்தை அதன் உரிமையாளர்கள், வாகனத்தில் ஊருக்கு சோகத்துடன் எடுத்து சென்றனர்.