திருவண்ணாமலை:பயன்பாட்டில் இல்லாத, 1,333 ஆழ்துளை குழாய்களில் மழை நீர் சேகரிக்கும் கட்டமைப்பு உருவாக்கிய மாவட்ட நிர்வாகத்துக்கு, நான்கு உலக சாதனை நிறுவனங்கள் சான்றிதழ் வழங்கின.
திருவண்ணாமலை மாவட்டத்தில், 602 கிராம பஞ்.,களில் பயன்பாடற்ற, 1,333 ஆழ்துளை குழாய்கள் உள்ளன.
இவற்றில், மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பை உருவாக்கி, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.
மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை சார்பில், நுாறு நாள் பணியாளர்களை வைத்து, கடந்த, 20ல் இப்பணி தொடங்கியது.
பயன்பாடற்ற ஆழ்துளை குழாய்களை சுற்றி, 3 அடி நீளம், 3 அடி அகலத்தில், இரண்டரை அடி ஆழத்தில் குழி தோண்டப்பட்டது.
ஆழ்துளை குழாயில் மண் செல்லாமல் நீர் கசிவு துளைகளை அமைத்து, குழியில் ஜல்லிக் கற்களை நிரப்பி, மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பை உருவாக்கும் வகையில் அமைக்கப்பட்டது.
இப்பணி, 14 நாட்களில் முடிக்கப்பட்டு, உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டது.
இப்பணியை, 'எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ், ஏசியன் ரெக்கார்ட்ஸ் அகாடமி, இந்தியா ரெக்கார்ட்ஸ் அகாடமி மற்றும் தமிழன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' ஆகிய உலக சாதனை நிறுவனங்கள் ஆய்வு செய்து, சாதனை படைத்ததற்கான சான்றுகளை, கலெக்டர் முருகேஷிடம் நேற்று வழங்கின.