ஸ்ரீவில்லிபுத்துார்:விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் வரதட்சணை கொடுமையால், காதல் மனைவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில், கணவருக்கு 12 ஆண்டு சிறை தண்டனை விதித்து, ஸ்ரீவில்லிபுத்துார் விரைவு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ராஜபாளையம் தெற்கு வைத்தியநாதபுரம் தெருவை சேர்ந்தவர் கணேஷ்ராம், 31. அதே பகுதியைச் சேர்ந்த இந்துஜாவை, 21, காதலித்து 2013ல் திருமணம் செய்தார்.
இவர்களுக்கு ஆண் குழந்தை உள்ளது. கணவரின் பெற்றோருடன் கூட்டுக்குடும்பமாக இந்துஜா வசித்து வந்தார்.
இந்நிலையில், வரதட்சணை கேட்டு கணேஷ் ராம், அவரது தந்தை குற்றாலிங்கம், தாய் வாசுகி, பாட்டி குருவம்மாள், உறவினர்கள் மன ரீதியாக துன்புறுத்தி வந்தனர்.
இதனால், 2014ல் இந்துஜா துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக, கணேஷ் ராம், குற்றாலிங்கம், வாசுகி, குருவம்மாள், உறவினர்கள் மணிவண்ணன், ராஜமாணிக்கம் ஆகியோர் மீது ராஜபாளையம் தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்துார் விரைவு மகளிர் நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை நடந்தது.
விசாரணை காலத்தில், குற்றாலிங்கம், வாசுகி, குருவம்மாள் இறந்து விட்டனர்.
இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
மணிவண்ணன், ராஜமாணிக்கம் ஆகியோரை விடுதலை செய்தும், கணேஷ்ராமுக்கு 12 ஆண்டு சிறை தண்டனை விதித்தும் நீதிபதி பகவதி அம்மாள் தீர்ப்பளித்தார்.