ராமநாதபுரம்:ராமநாதபுரத்தில் ஆன்-லைன் வணிக நிறுவனம் பெயரில் பரிசு குலுக்கல் விழுந்ததாக கூறி ஸ்டூடியோ உரிமையாளர் சவுந்திர பாண்டியனிடம் 2 லட்சத்து 20 ஆயிரத்து 600 ரூபாய் மோசடி செய்யப்பட்டது.
ராமநாதபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் சவுந்திரபாண்டியன் 46. ஸ்டூடியோ போட்டோகிராபரான இவர் 30 ஆண்டுகளாக ராமநாதபுரத்தில் ஸ்டூடியோ நடத்தி வருகிறார். இவர் ஆன்-லைன் வணிக நிறுவனத்தில் வீட்டு உபயோக பொருட்கள் வாங்குவது வழக்கம்.
ஜன.25ல் இவரது வீட்டு முகவரிக்கு கொல்கத்தாவில் இருந்து மனு அகர்வால் என்ற பெயரில் பதிவு தபால் வந்தது.
பிரித்ததில் ஸ்கிராட்ச் கார்டு இருந்தது. அதை சுரண்டி பார்த்த போது ரூ.8 லட்சம் பரிசு விழுந்திருப்பதாக அலைபேசி எண்கள் கொடுக்கப்பட்டிருந்தது.
தொடர்பு கொண்ட போது குறிப்பிட்ட ஆன்-லைன் வணிக நிறுவனத்தில் இருந்து பேசுவதாக தமிழ், ஹிந்தி கலந்து பேசியவர், நிறுவனத்தின் ஆண்டு விழாவை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்கு நடந்த குலுக்கலில் ரூ.1.20 லட்சமும், ஸ்கிராட்ச் கார்டு மூலம் ரூ.8 லட்சம் சேர்த்து ரூ.9.20 லட்சம் விழுந்ததாக கூறினார்.அவர்கள் கூறிய நிபந்தனையின் படி மூன்று தவணைகளாக ரூ.18,400 அனுப்பினார். அதன் பின் நண்பரான சஞ்சய் யாதவ் கணக்கில் இருந்து 13 முறை 2 லட்சத்து 2200 ரூபாய் அனுப்பினார்.
மேலும் பணம் கேட்டதால் சந்தேகம் அடைந்த சவுந்திரபாண்டியன் ராமநாதபுரம் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் ராஜன் விசாரிக்கிறார்.