ஊட்டி:ஊட்டி படகு இல்ல ஏரியின் ஒரு பகுதியை துார் வரும் வகையில் நீர் மட்டம் குறைக்கப்பட்டுள்ளது; அங்கு படகு சவாரிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம், ஊட்டி ஏரியில் படகு சவாரி செய்ய சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டுகின்றனர். நகரில் மத்தியில் ஓடும் கோடப்பமந்து கால்வாயில் இருந்து கழிவுநீர் மற்றும் மழைநீர் கலப்பதால், ஏரி நீர் மாசடைந்து, மண், சேறு நிறைந்து படகு சவாரி செய்ய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், பொதுபணி துறை நீர்வள பிரிவு சார்பில், கோடப்பமந்து கழிவுநீர் ஏரியில் கலக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஏரியில் சேறு, சகதி அதிகரித்திருப்பதால் அதனை அகற்ற துார்வாரும் பணிக்கான முற்கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நேற்று ஏரியில், 5 அடி வரை தண்ணீர் குறைக்கப்பட்டுள்ளது. விரைவில், இதற்கான ஆய்வு பணி நடத்தப்பட்டு, துார்வாரும் பணி துவக்கப்பட உள்ளது.
பொதுபணி துறை உதவி செயற்பொறியாளர் சதீஷ் கூறுகையில்,''ஏரியின் ஒரு பகுதியில் அதிகரித்துள்ள சகதியை துார்வார நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 5 அடிவரை தண்ணீர் குறைக்கப்பட்டு, அதில் உள்ள மண்ணின் அளவீடு பணி மேற்கொள்ளப்படும்.
அதற்கான திட்ட அறிக்கைக்கு பின், உடனடியாக நிதி பெறப்பட்டு துார் வாரும் பணி நடக்கும். நீர் மட்டம் குறைக்கப்பட்ட பகுதியில் மட்டும் படகு சவாரிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இப்பணி ஊட்டி கோடை சீசனுக்குள் நிறைவாகும்,'' என்றார்.