கூடலுார்:கூடலுார், ஏழுமுறம் செல்லும், சாலை ஓரத்தில் அனுமதி இன்றி, மண் அகற்றப்பட்டதால், சாலை சேதமடையும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
கூடலுார் பழைய பஸ் ஸ்டாண்ட் மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் இருந்து, ஏழுமுறம் சாலை பிரிந்து செல்கிறது. 'பழைய ஆவின் சில்லிங் சென்டர்' அருகே, வளைவான சாலை ஓட்டி, தனியார் இடத்தில், இரு நாட்களுக்கு முன், பொக்லைன் இயந்திரம் மூலம் மண் அகற்றி உள்ளனர், இதனால், சாலை பலமிழந்து சேதமடையும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. அப்பகுதியை கூடலுார் வருவாய் ஆய்வாளர் சகிர், வி.ஏ.ஒ., ரஞ்சித் ஆய்வு செய்தனர்.
வருவாய் துறையினர் கூறுகையில், 'இப்பகுதியில் அனுமதியின்றி மண் எடுக்கப்பட்டது குறித்து அதிகாரிகளுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும். மேலும், அங்கு உடனடியாக தடுப்பு சுவர் அமைக்க, இடத்தின் உரியாளரிடம் வலியுறுத்தி உள்ளோம்,' என்றனர்.