ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்ட கடலோரங்களில் இனப்பெருக்கத்திற்காக முட்டையிட வரும் ஆமைகள் பருவ நிலை மாற்றத்தால் விசைப்படகுகள், பவளப்பாறையில் மோதி இறப்பது அதிகரித்துள்ளது.
மன்னர் வளைகுடா தேசிய கடல் வளம் நிறைந்த இடமாக உள்ளதால் தான் தேசிய உயிர்கோள காப்பகமாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு கடல் குதிரைகள், அரிய வகை ஆமைகள், டால்பின்கள், கடல் பசு, பவளப்பாறை, திமிங்கலங்கள், வண்ண மீன்கள், கடல் பாம்புகள், முத்துசிப்பிகள் போன்ற பல அரிய உயினங்கள் வாழ்கின்றன.
குறிப்பாக தனுஷ்கோடி, மண்டபம், கீழக்கரை, ராமநாதபுரம் ஆகிய கடற்கரை பகுதியில் சித்தாமைகள் அதிகளவில் வாழ்கின்றன. கடலோரத்தில் பெருகும் வீடுகள், ஓட்டல்கள், மின் விளக்குகளால் இவற்றில் பெரும்பாலானவை குஞ்சுகளாக இருக்கும் போதே திசை மாறி சென்று இறந்துவிடுகின்றன.
மேலும் கடலுக்குள் அதிகரித்துள்ள வெப்பம், மாசு போன்ற காரணங்களும், நவீன மீன்பிடி தொழில் முறையும் இவற்றின் அழிவுக்கு காரணமாகின்றன.
தற்போது ஆமைகள் இனப்பெருக்க காலம் என்பதால் முட்டையிடுவதற்காக கடற்கரை நோக்கி வருகின்றன. அவ்வாறு வரும் போது புயலால் கால நிலை மாற்றம், விசைப்படகில் மீன் பிடிக்கும்போது பவளப்பாறைகளில் மோதி இறப்பது அதிகரித்துள்ளது.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மண்டபம், அரியமான் கடற்கரை பகுதியில் 5 சித்தாமைகள் இறந்துள்ளன. சில இடங்களில் இறந்து பல நாட்களாக கிடப்பதாக மீனவர்கள் கூறினர்.
மண்டபம் வனச்சரகர் மகேந்திரன் கூறுகையில், தற்போது இனப்பெருக்க காலம் என்பதால் ஆமைகள் முட்டையிடுவதற்காக கடலோரப் பகுதிகளுக்கு வருகின்றன. புயல் காரணமாகவும், இரவு நேர படகு பயணத்தின் போதும் பவளப்பாறை, படகில் மோதி ஆமைகள் இறக்கின்றன. கடலோரத்தில் இறந்து கிடக்கும் ஆமைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.