பொள்ளாச்சி:பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட, அரசுப்பள்ளிகள் மற்றும் அரசு அலுவலக சுவர்களில், சினிமா படம்மற்றும் அரசியல் போஸ்டர்ளை, அத்துமீறிஒட்டுகின்றனர்.
இந்நிலையில், காந்தி சிலை அருகே தனியார் கட்டட நிர்வாகத்தினர், போஸ்டர் ஒட்டுவோருக்கு வேண்டுகோள் விடுத்து ஒட்டியுள்ள போஸ்டர் கவனத்தை ஈர்த்துள்ளது.
பொள்ளாச்சி நகரப்பகுதியில், பிளக்ஸ் மற்றும் போஸ்டர்கள் ஒட்ட விதிமுறைகளை பின்பற்ற அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.
சாலை தடுப்புகள், அரசு கட்டடங்கள், பழைய மற்றும் கூடுதல் பஸ் ஸ்டாண்ட்கள், பஸ் ஸ்டாப் நிழற்கூரைகள், பேரிகார்டு போன்றவற்றில், போஸ்டர்கள் ஒட்டக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், நகரில் விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுவதில்லை.
கோவை ரோடு, பாலக்காடு ரோடு, பஸ் ஸ்டாண்ட், பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களின் சுற்றுச்சுவரில் அரசியல் கட்சியினரின் போஸ்டர்கள் மற்றும் சினிமா படம் மற்றும் விளம்பர போஸ்டர்களும் ஒட்டப்படுகின்றன.
இதனால், நகரப்பகுதியில் உள்ள அரசு சுவர்கள் அலங்கோலமாககாட்சியளிக்கிறது. இதனை கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கைஎழுந்துள்ளது.
தற்போது, சென்டர் மீடியனில் மட்டும் போஸ்டர்கள் ஒட்டுவது நிறுத்தப்பட்டு, வெள்ளை அடிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், சுவர்களில் போஸ்டர்கள் ஒட்டும் கலாசாரம் இன்னும் மாறவில்லை.
கோட்டூர் ரோடு மேம்பாலத்தில் அரசியல் கட்சியினர் எழுதுவதற்கு இன்னும் தடை விதிக்கப்படாமல் உள்ளது.
இந்நிலையில், காந்தி சிலை அருகே, தனியார் கட்டடத்தின் சுவரில், அரசியல் மற்றும் சினிமா போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. அந்த கட்டடத்துக்கு செல்லும் வழியை மறித்தும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.
'போஸ்டர் ஒட்டாதீர்கள்' என அறிவுறுத்தியும் யாரும் கேட்காததால், கட்டட நிர்வாகம் சார்பில், வேண்டுகோள் விடுக்கும் வகையில் ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
அதில், 'எங்களுடைய கட்டடத்தின் முன் உள்ள சுவரில் சுவரொட்டிகளை ஒட்டுகிறீர்கள். கட்டடத்தின் உள்ளே செல்ல ஒரு வழி மட்டுமே உள்ளது. அந்த வழியை மறைத்து ஒட்டுகிறீர்கள். எனவே கதவை தவிர்த்து மற்ற பகுதியில் ஒட்டுமாறு கேட்டுக்கொள்கிறோம்,' என, குறிப்பிடப்பட்டுள்ளது.
தனியார் கட்டட உரிமையாளர்களே, வேண்டுகோள் விடுக்கும் அளவுக்கு போஸ்டர் கலாசாரம் தலைதுாக்கியுள்ளது.
ஆனாலும், அரசுத்துறை அதிகாரிகள் யாரும் இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க முன்வராதது வேதனையளிக்கிறது.