கோத்தகிரி:கோத்தகிரி பகுதியில் சாரல் மழையுடன், மேகமூட்டமான காலநிலை நிலவுவதால், இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. நீலகிரியில், ஊட்டி, குன்னுார் உட்பட சில பகுதிகளில் இரு நாட்களாக சாரல் மழையுடன், தொடர்ந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், மழை பெய்து வருவதால் கடும் குளிர் நிலவுவதால், இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
வாகனங்கள் 'மிஸ்ட்' விளக்குகளை எரிய வைத்து ஆமை வேகத்தில் இயக்கப்படுகின்றன. தேயிலை தோட்டங்களில், பசுந்தேயிலை பறிக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. தொழிலாளர்கள்,'பிளாஸ்டிக்' போர்வைகளை அணிந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
போதிய சூரிய வெளிச்சம் இல்லாமல், இதே காலநிலை நீடிக்கும் பட்சத்தில், தேயிலை தோட்டங்களில் கொப்புள நோய் தாக்கும் அபாயம் உள்ளதால், மகசூல் குறைய வாய்ப்புள்ளது. விவசாயிகள் கூறுகையில்,'கடந்த இரு மாதங்களாக பனி காரணமாக தேயிலை மகசூல் வெகுவாக குறைந்தது. இதனால், தொழிற்சாலையில் கொள்முதல் பாதிக்கப்பட்டு, வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
கோடை நெருங்கும் வேளையில் மழை பெய்வதால், கொப்புள நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால், எங்களுக்கு பாதிப்பு மேலும் அதிகரிக்கும். அரசு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.