- நமது நிருபர் -
உக்கடம் - ஆத்துப்பாலத்தில் மேம்பாலம் கட்டுமான பணி காரணமாக, அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் கடுமையாக உள்ளது. இதனால், போக்குவரத்தில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, பொள்ளாச்சி, பாலக்காடு ரோட்டில் இருந்து ஆத்துப்பாலம் வழியாக, கோவை மாநகருக்குள் உக்கடம் நோக்கி செல்ல, கனரக வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி ரோட்டில் இருந்து கோவை மாநகருக்குள் வரும் பைக், கார்கள், ஆத்துப்பாலத்தில் இருந்து உக்கடம் நோக்கி வலதுபுறம் திரும்ப தடை செய்யப்பட்டுள்ளது.
இவ்வாகனங்கள், குனியமுத்துார் ரோட்டில், 500 மீட்டர் சென்று 'யூ டர்ன்' செய்து உக்கடம் நோக்கி செல்லலாம். பாலக்காடு ரோட்டில் வரும் கனரக, சரக்கு வாகனங்கள் சுண்ணாம்பு காளவாய் சந்திப்பு, புட்டுவிக்கி ரோட்டில் செல்ல வேண்டும்.
பொள்ளாச்சி ரோட்டில் வரும் கனரக, சரக்கு வாகனங்கள், சுந்தராபுரம் சந்திப்பில் இருந்து வலதுபுறமாக திரும்பி, போத்தனுார், நஞ்சுண்டாபுரம், ராமநாதபுரம் ரோடு வழியாக கோவை மாநகருக்குள் செல்லலாம். கோவையிலிருந்து பொள்ளாச்சி ரோடு செல்லும் பைக், கார்கள் வழக்கம் போல் ஆத்துப்பாலம் வழியாக செல்லலாம்.
பொள்ளாச்சியில் இருந்து கோவை செல்வோர், முன்கூட்டியே திட்டமிட்டு, அறிவிக்கப்பட்டுள்ள மாற்று வழித்தடத்தில் பயணிக்கலாம்.