பொள்ளாச்சி;'பொள்ளாச்சியில், குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்கள், பாதாள சாக்கடை திட்ட இணைப்பை, வரும், 28ம் தேதிக்குள் பெற வேண்டும். இல்லையெனில், குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும்,' என, நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆனால், திட்டத்தில் உள்ள பிரச்னைகளை சரி செய்ய அக்கறை காட்டாததால், மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
பொள்ளாச்சியில், குடிநீர் வடிகால் வாரியம் வாயிலாக, கடந்த, 2016ல், 109.62 கோடி ரூபாய் செலவில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் துவங்கப்பட்டன. கட்டுமான பொருட்கள் விலை உயர்வு போன்ற காரணங்களால், இத்திட்டத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 170.22 கோடி ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
தற்போது, கட்டுமான பணிகள் முடிந்த நிலையில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்கு இணைப்பு வழங்கும் பணிகள் நடைபெறுகின்றன.
அறிவிப்பு
பொள்ளாச்சி நகராட்சி கமிஷனர் (பொ) முருகானந்த் அறிக்கை வருமாறு:
நகராட்சியில், குடிநீர் வடிகால் வாரியம் வாயிலாக, பாதாள சாக்கடை திட்டப்பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான இணைப்புகள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. எனவே, நகர பொதுமக்கள், தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் வீட்டுக்குழாய் இணைப்புகளை, நகராட்சி ஒப்பந்ததாரர் வாயிலாக மேற்கொள்ள ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
சட்ட நடவடிக்கை
நகராட்சிக்கு உட்பட்ட, மூன்றாவது வார்டில் இருந்து, 36 வார்டுகளில் உள்ள பகுதிகளில், வீடு, வணிக நிறுவனங்களுக்கு, கழிவுநீர் இணைப்புகள் வழங்கும் பணி நடைபெற்று வருகின்றது.
வரும், 28ம் தேதிக்குள் வீடு மற்றும் வணிக இணைப்புகள் கட்டாயமாக இணைக்கப்பட வேண்டும். வரும், 28ம் தேதிக்குள் இணைக்காவிட்டால், கழிவுநீரை, மழைநீர் வடிகாலில் விடுபவர்கள் மீது, தமிழ்நாடு பொது சுகாதார சட்டப்படி, மேல் நடவடிக்கை மற்றும் நீதிமன்றம் வாயிலாக வழக்கு தொடரப்படும்.
இணைப்பு பெறாத வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் இருந்து வெளிவரும் கழிவுநீர், நகராட்சியின் சுகாதார பிரிவு சார்ந்த பணியாளர்களை கொண்டு அடைக்கப்படும். மேலும், குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும்.
எனவே, பொதுமக்கள், இத்திட்டத்தில் உடனே இணைப்புகள் பெற்று பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாரு பொறுப்பு?
பாதாள சாக்கடை திட்டத்தில், வீடுகளுக்கு இணைப்பு வழங்க நகராட்சி நிர்வாகம் முனைப்பு காட்டுகிறது. ஆனால், இணைப்பு வழங்கும் பணியாளர்கள் முறையாக பணிகளை மேற்கொள்வதில்லை என புகார் எழுகிறது.
மேலும், இணைப்பு வழங்கியதுடன், தோண்டப்பட்ட குழி மீது சிமென்ட் கலவை போட்டு மூடப்படுகிறது. இப்பணியை தரமாக மேற்கொள்ளாததால், சில நாட்களிலேயே பெயர்ந்து விடுகிறது.
பிரச்னை இருக்கு
குழாய் அடைப்பு போன்ற பிரச்னைகள் ஏற்பட்டால், முழுவதுமாக அகற்றி அதனை சரி செய்ய வேண்டியுள்ளது. இதற்கு கூடுதல் செலவு உரிமையாளர்களுக்கு ஏற்படுகிறது. மேலும், ஆங்காங்கே குழியில் இருந்து கழிவுநீர் வெளியேறி ரோட்டை சேதப்படுத்துகின்றன.
இதுகுறித்து, யாரிடம் புகார் தெரிவிக்க வேண்டும். இதற்கு யார் பொறுப்பு என்பது குறித்து அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கவில்லை. இணைப்பு வழங்க மட்டும் அக்கறை காட்டும் நகராட்சி நிர்வாகம், இதுபோன்ற பிரச்னைகளை களையவும் அக்கறை செலுத்தி, மக்களிடம் கருத்து கேட்டு, நடவடிக்கை எடுக்க வேண்டும்.