பொள்ளாச்சி:'ஆனைமலை மாசாணியம்மன் கோவிலுக்கு வரும் வெளியூர் பக்தர்கள், ரயில் சேவையை பயன்படுத்த வேண்டும்,' என, ரயில் பயணியர் நலச்சங்கத்தினர் வலியுறுத்தினர்.
ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், வரும், 6ம் தேதி குண்டம் திருவிழா நடக்கிறது. விழாவை முன்னிட்டு, மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து அதிக பக்தர்கள் வருவது வழக்கம்.
ஆனைமலை வரும் தென்மாவட்ட பக்தர்கள், ரயில் சேவையைபயன்படுத்த வேண்டும். அதிக கட்டணம் செலுத்தி வாகனங்களில் வருவதை தவிர்க்கலாம், என, அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஆனைமலை ரயில் பயணியர் நலச்சங்கத்தினர் கூறியதாவது:
பிரசித்த பெற்ற ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், குண்டம் திருவிழா வரும், 5, 6ம் தேதிகளில் நடைபெற உள்ளது.
திருவிழாவில், பாளையங்கோட்டை, திருநெல்வேலி, கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல் பகுதி பக்தர்கள் பங்கேற்பர்.
இவர்கள், கோவிலுக்கு வருவதற்கு ரயில் வசதி உள்ளது. திருச்செந்துார் - பாலக்காடு ரயிலில், ஆனைமலை ரோடு ரயில்வே ஸ்டேஷன் இறங்கி, மாசாணியம்மன் கோவிலுக்கு செல்லலாம்.
ஆனைமலை ரோடு ரயில்வே ஸ்டேஷனில் இருந்து காலை, 6:57 மணிக்கு ரயில் உள்ளது. அல்லது, பொள்ளாச்சியில் இருந்து மதியம், 3:28 மணிக்கு வரும்கோவை - மதுரை ரயிலில் மதுரை வரைபயணிக்கலாம்.
ஆனைமலை ரோடு ரயில்வே ஸ்டேஷனில் இருந்து மதுரைக்கு, 75 ரூபாய், விருதுநகருக்கு - 85, திருநெல்வேலிக்கு - 120 ரூபாய் கட்டணம். இந்த ரயில்சேவையை பயன்படுத்தி பொதுமக்கள் பயன்பெற முன்வர வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.