பொள்ளாச்சி:பொள்ளாச்சியில் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், சாலை பாதுகாப்பு குறித்து இன்று விவாத மேடை நடக்கிறது.
பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், ெஹல்மெட் அணிவதன் அவசியம், லைசென்ஸ் இல்லாமல் வாகனங்கள் ஓட்டுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, பொதுமக்கள், கல்லுாரி மற்றும் பள்ளி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
இதைத்தொடர்ந்து, கல்லுாரி மாணவர்கள் பங்கேற்கும் விவாத மேடை இன்று, 4ம் தேதி நடக்கிறது.
வட்டார போக்குவரத்து அலுவலர் முருகானந்தம் கூறியதாவது:
தமிழக அரசின் போக்குவரத்துறை சார்பில், கல்லுாரி மாணவ, மாணவியர் பங்கேற்கும் விவாத மேடை நடக்கிறது.
என்.ஜி.எம்., கல்லுாரியில் நடக்கும் இந்த நிகழ்ச்சியில், சாலை விபத்துக்கு பெரிதும் காரணம் அலட்சியமே, அறியாமையே என்ற தலைப்பில் விவாத மேடை நடக்கிறது. இந்த நிகழ்ச்சி, சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடத்தப்படுகிறது.
சாலைவிதிகளை ஏன் கடைப்பிடிக்க வேண்டும்; அவ்வாறு கடைபிடிப்பதால் என்ன நன்மை, என, மாணவர்களிடம் விளக்கப்பட உள்ளது.
நிகழ்ச்சியை காண போதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நேரடியாக வராதவர்களுக்கு 'யூடியூப்' வாயிலாக ஒளிபரப்பு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.