திருச்சி:-ஸ்ரீரங்கம், ரெங்கநாதர் கோயிலில், தை தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது.
திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில், தை தேர் திருவிழா, ஜன., 26ம் தேதி, கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஜன., 29ம் தேதி தங்க கருட வாகனத்தில் நம்பெருமாள் உத்திர வீதிகளில் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நேற்று முன்தினம் காலை 7:30 மணிக்கு நம்பெருமாள் கண்ணாடி அறையில் இருந்து, பல்லக்கில் புறப்பட்டு, ரெங்க விலாச மண்டபம் வந்தார்.
மாலை 6:30 மணிக்கு குதிரை வாகனத்தில் புறப்பட்டு, வையாளி கண்டருளினார். தைத்தேர் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், நேற்று நடைபெற்றது. அதிகாலை 3:45 மணிக்கு உபய நாச்சியார்களுடன் கண்ணாடி அறையில் இருந்து புறப்பட்ட நம் பெருமாள், தைத் தேர் மண்டபம் வந்தார்.
அங்கு, காலை 5:15 மணி வரை ரதரோஹனம் நடைபெற்று, அலங்கரிக்கப்பட்ட தேரில் உபய நாச்சியார்களுடன் நம்பெருமாள் எழுந்தருளினார்.
காலை 6:00 மணிக்கு, 'கோவிந்தா, கோவிந்தா' கோஷத்துடன் ஏராளமான பக்தர்கள், தேர் வடம் பிடித்து இழுத்தனர். உத்திரவீதிகளில் வலம் வந்த தேர் நிலையை அடைந்தது.
இன்று சத்தாபரணம் நிகழ்ச்சியும், நாளை, ஆடும் பல்லக்கில் நம் பெருமாள் எழுந்தருளும் நிகழ்ச்சியுடன் தேர்த் திருவிழா நிறைவடைகிறது.