பொள்ளாச்சி:ஆழியாறு அணையில் இருந்து, புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு, பொள்ளாச்சி கால்வாய் வழியாக தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது.
தண்ணீர் தடையின்றி செல்ல, நீர் வினியோகத்துக்கு முன், பாசன சபை மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் சார்பில் துார்வாரப்பட்டு கால்வாய்கள் தயார்படுத்தப்பட்டன.
இந்நிலையில், ஜமீன் ஊத்துக்குளி அருகே, குஞ்சிபாளையம் பிரிவில், பொள்ளாச்சி கிளை கால்வாயில் மருந்து பாட்டில்கள் உள்ளிட்ட கழிவை கொட்டியுள்ளனர்.
கால்வாயின் முகப்பு பகுதியில் மருந்து பாட்டில்கள், பிளாஸ்டிக் கழிவு, பயன்படுத்திய செருப்பு உள்ளிட்டவை குவிந்துள்ளது. இவை அடைத்து கொண்டுள்ளதால், கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, நீர் செல்வது தடைபடுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
ஜமீன் ஊத்துக்குளி பி.ஏ.பி., பாசன சபை தலைவர் ராம்மனோகர் காளிதாஸ் கூறியதாவது:
குஞ்சிபாளையம் பிரிவு அருகே, நஞ்சேகவுண்டன்புதுார் செல்லும் கிளை கால்வாய் வாயிலாக, ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமாக பாசனம் பெறுகிறது.
இந்நிலையில், இந்த கால்வாயில் குப்பை, கண்ணாடி பாட்டில்கள், மருந்து பாட்டில்கள், பழைய துணிகளை ஒரு சிலர் கொட்டியுள்ளனர். இதனால், பாசன பகுதிகளுக்கு தண்ணீர் செல்வது பாதிக்கிறது. மிகுந்த சிரமங்களுக்கு இடையே, கால்வாயை துார்வாரி தண்ணீர் கொண்டு செல்கிறோம்.
பாசன கால்வாய் அருகே வசிப்போர் மற்றும் பொதுமக்கள், கால்வாயில் கழிவை கொட்டுவதை தவிர்க்க வேண்டும்.
பாசன நீரை, கால்நடைகளும் குடிக்கின்றன. நிலங்களில் சாகுபடி செய்யும் பயிர்களுக்கு பாய்ச்சப்படுகிறது. எனவே, கால்வாயில் கழிவை வீசுவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.