மூதாட்டிகளிடம் நகை திருட்டு
பொள்ளாச்சி அருகே, கோட்டூரை சேர்ந்தவர் சிவபாக்கியம்,65. இவர், கடந்த, 1ம் தேதி பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிேஷகத்துக்கு வந்தார்.
கூட்ட நெரிசலில், அவர் அணிந்திருந்த ஐந்து பவுன் நகை திருட்டு போனது. இதுபோன்று, பொள்ளாச்சி வடுகபாளையத்தை சேர்ந்த துளசியம்மாள், 72, அருகே குடியிருப்போருடன், கோவில் கும்பாபிேஷக விழாவுக்கு வந்தார். இவரது, மூன்று பவுன் நகையும் திருட்டு போனது. இதுகுறித்து, அவர்கள் கொடுத்த புகாரின் பேரில், கோட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
வாலிபர் மீது போக்சோ வழக்கு
பொள்ளாச்சி அருகே, பிளஸ் 2 வரை படித்த, 18 வயதான பெண், தனியார் மார்க்கெட்டிங் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அப்போது, அந்த நிறுவனத்தின் உரிமையாளர் மகன் கதிரேசன்,27, உடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.
கடந்த செப்., மாதம் 7ம் தேதி வீட்டை விட்டு இருவரும் வெளியேறி தர்மபுரி சென்றனர். அங்கு, கணவன், மனைவி எனக் கூறி ஒரு வீட்டில் தங்கி, துணிக்கடையில் வேலை செய்தனர். இந்நிலையில், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. கருத்து வேறுபாடு காரணமாக அவர் பிரிந்து சென்றார். திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என, மேற்கு போலீசாரிடம் பெண் புகார் கொடுத்தார். போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.
ஆழியாறில் பெண் தற்கொலை
பொள்ளாச்சி, ஆழியாறு புளியங்கண்டியை சேர்ந்த, 18 வயது பெண், வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். அவர் அடிக்கடி மொபைல்போனில் யாருடனோ பேசி வந்துள்ளார். இந்நிலையில், மன அழுத்தத்தில் இருந்த அவர், வீட்டின் அருகே இருந்த 'ெஷட்' துாணில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து, ஆழியாறு போலீசார் விசாரிக்கின்றனர்.
பாம்பு கடித்து சிறுவன் பலி
பழநியை சேர்ந்தவர்பிரபு,37. இவர், மனைவி பிரியா,30, மகன் லோகேஸ்வரன்,5, ஆகியோருடன் கிணத்துக்கடவு அருகே தேவராயபுரத்தில் வசித்து வருகிறார். டெய்லர் வேலை செய்து வருகிறார். அவரது மனைவி, கூலி வேலைக்கு சென்று வருகிறார்.
இந்நிலையில், கடந்த, 28ம் தேதி இரவு வீட்டுக்குள் சிறுவன், மொபைல்போனில் விளையாடிக்கொண்டு இருந்த போது, வீட்டினுள் நுழைந்த பாம்பு, சிறுவனை கடித்தது. இதை கண்டு பதட்டமடைந்த பெற்றோர், பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு இருந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி சிறுவன் இறந்தார். கிணத்துக்கடவு போலீசார் விசாரிக்கின்றனர்.