திண்டிவனம், : தமிழ்நாடு பார் கவுன்சில் நிர்வாகிகளை, அவதுாறாக பேசி சமூக வலைதளங்களில் பதிவிட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, திண்டிவனம் வழக்கறிஞர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
திண்டிவனம் அட்வகேட் அசோசியேஷன் தலைவர் வழக்கறிஞர் சேகர், மூத்த வழக்கறிஞர் விஜயன் ஆகியோர் தலைமையில் நேற்று சங்க நிர்வாகிகள், திண்டிவனம் போலீசில் நிலையத்தில் அளித்துள்ள ஒரு புகார் மனு:
சென்னை அம்பத்துார் பகுதியைச் சேர்ந்த சத்தியசீலன் என்பவர், மீது அம்பத்துார் போலீஸ் நிலையத்தில் குற்ற வழக்கு உள்ளது. இதை மறைத்து, அவர் கடந்த 2014ம் ஆண்டு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்து கொண்டு வழக்கறிஞர் தொழில் செய்து வந்துள்ளார்.
அவர் மீது, கடந்த மாதம் 28ம் தேதி, தமிழ்நாடு பார் கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றி, வழக்கறிஞர் தொழில் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த மாதம் 29ம் தேதி சத்தியசீலன், வாட்ஸ் அப் குழுவில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்
அந்த பதிவில், தமிழ்நாடு பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ், இணைத் தலைவர் மோகன கிருஷ்ணன், அகில இந்திய தமிழ்நாடு பார் கவுன்சில் துணைத் தலைவர் பிரபாகரன் ஆகியோருக்கு, கலங்கம் ஏற்படுத்தும் வகையிலும், மிரட்டும் தொனியில் ஒருமையில் பேசி சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
பார் அசோசியேஷன் நிர்வாகிகளை அவதுாறாக பேசிய அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.