திண்டுக்கல்-திண்டுக்கல்லில் அறிவிப்பு பலகைகள், பேரிகார்டுகள், சென்டர் மீடியன்கள், பள்ளி வளாகம், அரசு அலுவலகங்களின் காம்பவுண்ட் சுவர்கள், கோயில் பாதைகள், இலவச கழிப்பறைகள், டிரான்ஸ்பார்மர் தடுப்புகள், மின்கம்பங்கள் என நகரெங்கும் பெருகி வரும் போஸ்டர் கலாசாரத்தால் சுவர்கள் அலங்கோலமாகி மாநகராட்சியின் எழில் கெட்டு வருகிறது.
மேலே குறிப்பிட்ட இடங்களை தவிர திருமணம், காதுகுத்து, புதுப்படவரவு, சுப, துக்க நிகழ்வுகள், சாதி, அரசியல் கட்சிகளின் கொண்டாட்டத்தின் போது இத்தகைய போஸ்டர்கள் பலமடங்கு பெருகி நகரின் அழகுக்கு வேட்டு வைக்கிறது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் மக்கள் முகம் சுளிக்கும் வகையிலான சினிமா பட கவர்ச்சி போஸ்டர்களும், ஆண்மை குறைவு, போதை பொருட்களுக்கான விளம்பர அறிவிப்புகளையும் போஸ்டர்கள், ஸ்டிக்கர்களில் ஒட்டுவது சாதாரணமாக அரங்கேறி வருகிறது.
மேம்பாலங்களின் சுவர்களில் ஒட்டப்படும் போஸ்டர்களானது ஆண்டு கணக்கில் அகற்றப்படாமலும், மறைத்து ஒட்டப்படாமலும் இருக்க பாலத்தின் துாண்களின் உயரத்தில் ஒட்டி விடுகின்றனர். இதனால் ஆண்டு முழுவதுமான இலவச விளம்பரம் கிடைப்பதாக நினைத்து மேம்பாலங்களின் அழகை கெடுக்கின்றனர். இப்படி நகரெங்கும் ஒட்டப்படும் போஸ்டர்களில் தனி நபர்கள் தன்னைத்தானே வாழ்த்தி கொண்டு சுயதுதி விளம்பர பிரியர்களாகி விடும் நிலையும் தொடர்கிறது.
இப்படியாக போஸ்டர்கள் ராஜ்ஜியம் தலைவிரித்தாடுவதை மாநகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளாமல் விடுவதால் நகரின் துாய்மையும், அழகும்
கெட்டு விளம்பர பிரியர்களின் ஆளுமையில் திண்டுக்கல் நகரம் எனும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஆட்டை கடித்து மாட்டை கடித்து மனிதனை கடித்த கதையாக இணையதள சுய விளம்பர விரும்பிகளும் போஸ்டர் வாயிலாக நகரின் அழகை கெடுக்க படையெடுத்துள்ளனர். இத்தகைய செயலில் ஈடுபடுவோர் மீது போலீசாரின் குற்றவியல் நடவடிக்கை அவசியமாகிறது.
க வனத் தை திருப்பும் செயலாக...
சுப்ரமணி, வாட்டர் சர்வீஸ் உரிமையாளர், திண்டுக்கல்: சாலையின் நடுவே சென்டர் மீடியன்களில் போஸ்டர்கள் ஒட்டுவது வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பும் செயலாக உள்ளது.
விழிப்புணர்வு வாசகங்கள் இடம்பெற வேண்டிய இடத்தில் சுய விளம்பர போஸ்டர்கள் ஒட்டுவது தவறாகும். அரசு அறிவிப்பு பலகைகள், விழிப்புணர்வு வாசகங்கள், மைல்கல்கள்,
தெரு பெயர்களின் பெயர் பலகைகள் மீது போஸ்டர்கள் ஒட்டும் சம்பந்தப்பட்டவர்களின் மீது அபராதம், குற்றவியல் நடவடிக்கை எடுத்தால்தான் இப்பிரச்னை கட்டுக்குள்வரும்.
போஸ்டர் நகராக காட்சி
ஜெயசீலன், தனியார் ஊழியர், திண்டுக்கல்: போஸ்டர் கலாசாரம் எல்லை மிறி சென்று கொண்டிருக்கிறது.
விளம்பர பிரியர்கள் சோசியல் மீடியாவில் பணம் சம்பாதிக்க போஸ்டர்களை பயன்படுத்துகின்றனர்.
காணும் இடங்களில் எல்லாம் போஸ்டர்களை ஒட்டுவதால் திண்டுக்கல் மாவட்டம் போஸ்டர் நகராக காட்சியளிக்கிறது.
இதற்குரிய சட்ட நடவடிக்கை தொடராவிட்டால் போஸ்டர் கும்பல்களின் அடாவடியில் பெரிய சமுதாய பிரச்னைகள் உருவாகும்.
அவப்பெயரை உருவாக்கி விடுவர்
சின்னச்சாமி, தனியார் ஊழியர், திண்டுக்கல்: சினிமா படம் திரையிட விளம்பரம் தேவைப்பட்டாலும், கட்சிகளுக்கிடையேயான கருத்து சாடல்களுக்குமான ஆயுதமாக போஸ்டர் யுத்தம் தொடர்கிறது. இதனால் காழ்ப்புணர்ச்சி அதிகமாகி சச்சரவு தொடர்வது வாடிக்கையாக உள்ளது.
பல போஸ்டர்களில் பொதுமக்கள் முகம் சுளிக்கும் அளவிற்கு வாசகங்கள் உள்ளன.
பல கிராமங்களில் நிழற்குடைகளும் போஸ்டர் கூடாரங்களாக மாறி வருகிறது.
இந் நிலை தொடர்ந்தால் சுய விளம்பரத்திற்காக ைஹவே சாலையின் துார அளவீட்டு பலகைகளிலும் போஸ்டர்களை ஒட்டி தமிழகத்திற்கே அவப்பெயரை உருவாக்கி விடுவர்.
மின்கம்பங்களையும் விட்டு வைக்கல
செந்தில்குமார், லேத் ஒர்க் கடை உரிமையாளர், திண்டுக்கல்: மின்கம்பங்கள் ஒவ்வொன்றிலும் சிறிய அளவிலான பிட் நோட்டீஸ்களை ஒட்டி வருகின்றனர். மந்திரம், பில்லி, சூனியம், ஆண்மை குறைவுக்கு மருந்து, எய்ட்ஸ் நோய்க்கு மருத்துவம், அந்தரங்க பிரச்னைகள் பற்றிய தனியார் விளம்பரங்களே அதிகம் உள்ளது. கட்டுப்பாடின்றி ஒட்டப்படும் இந்த போஸ்டர்களை மின்துறை அகற்றவோ, நடவடிக்கையோ எடுத்ததாக தெரியவில்லை.