புதுச்சேரி : ஓய்வு பெற்ற மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை அதிகாரியிடம் 'பிட்காயினில்' முதலீடு செய்வதாகக் கூறி ரூ.15 லட்சம் மோசடி செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி, கோரிமேட்டை சேர்ந்தவர் உலகநாதன்,49; மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையில் அதிகாரியாக பணிபுரிந்து, விருப்ப ஓய்வு பெற்றவர். இவர், 'பிட்காயினில்' பணம் முதலீடு செய்ய ஆன் லைனில் விபரங்களை தேடினார்.
அப்போது, குறிப்பிட்ட ஒரு 'செயலி'யில் இருந்த மொபைல் எண்ணை தொடர்பு கொண்டு, 'பிட்காயின்' முதலீடு விவரங்களை கேட்டறிந்தார்.
மறுமுனையில் பேசிய நபர், தன்னை சம்பந்தப்பட்ட பிட்காயின் முதலீடு நிறுவனத்தின் மேலாளர் என அறிமுகம் செய்து கொண்டார்.
மேலும், பிட்காயினில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறினார்.இதனை நம்பிய உலகநாதன், அந்த நிறுவனத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ரூ.15 லட்சத்தை குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் செலுத்தினார்.
சில நாட்கள் கழித்து அந்த பிட்காயின் நிறுவனத்தின் மொபைல் எண்ணிற்கு தொடர்பு கொண்ட போது, 'சுவிட்ச் ஆப்' ஆகி இருந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து உலகநாதன், புதுச்சேரி 'சைபர் கிரைம்' போலீசில் நேற்று முன்தினம், புகார் செய்தார்.அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிந்து., மோசடி நபரை தேடி வருகின்றனர்.