புதுச்சேரி : புதுச்சேரி சட்டசபையில் இருந்து தி.மு.க., - காங்., எம்.எல்.ஏ.,க்கள் நேற்று வெளிநடப்பு செய்தனர்.
புதுச்சேரி சட்டசபை நேற்று காலை 9:30 மணிக்கு கூடியது. சபாநாயகர் செல்வம், திருக்குறள் வாசித்து சபை அலுவல்களை துவக்கினார்.
பின், இங்கிலாந்து ராணி எலிசபெத் மறைவுக்கு இரங்கல் குறிப்பை சபாநாயகர் வாசித்தார். தொடர்ந்து, சபையில் அனைவரும் எழுந்து நின்று, 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து, அடுத்த அலுவலுக்கு சபாநாயகர் சென்றார். தொடர்ந்து, அமைச்சர் நமச்சிவாயம் பேசுவதற்காக எழுந்தார். அப்போது, தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் ஒட்டுமொத்தமாக எழுந்து பேசத் துவங்கினர்.
அவர்களுடன், காங்., எம்.எல்.ஏ.,க்களும் எழுந்து நின்று பேசத் துவங்கினர். இதனால், சபையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. தொடர்ந்து, மாநில அந்தஸ்து விஷயத்தில் என்.ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணி நாடகமாடுவதாக கூறி, காங்., எம்.எல்.ஏ.,க்கள் வைத்தியநாதன், ரமேஷ் பரம்பத் வெளிநடப்பு செய்தனர்.
சபையில் இருந்த தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள், மாநில அந்தஸ்து உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக அரசின் செயல்பாடுகளை விமர்சித்து பேசினர்.
சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் சிவா பேசும்போது, 'முதல்வர், அமைச்சர்கள் மத்திய அரசிடம் பேசி கஷ்டப்பட்டு பணம் வாங்கி வருகிறார்கள். ஆனால், அதிகாரிகள் செலவு செய்யாமல் திருப்பி அனுப்புகின்றனர். மாநில அந்தஸ்து நமக்கு கண்டிப்பாக தேவையாக உள்ளது.
இந்த ஆட்சியில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் எதுவும் நடக்கவில்லை. பள்ளி மாணவர்களுக்கு சீருடை, சைக்கிள் வழங்கப்படவில்லை.
என்.ஆர். காங்., கட்சியின் கூட்டணி கட்சியான பா.ஜ., அரசு தான் மத்தியில் உள்ளது. ஆனால், புதுச்சேரியில் ஜனநாயகத்தை செயல்படாமல் செய்து விட்டனர். மாநில அந்தஸ்து பெறுவதில் முதல்வர் உறுதியாக இல்லை. இதை கண்டிக்கிறாம்.
மாநில அந்தஸ்து தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றி தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும். 'மாநில அந்தஸ்து கிடைத்தால் என்னவெல்லாம் கிடைக்குமோ, அதை எல்லாம் மத்திய அரசிடம் இருந்து பெற்றுத் தருகிறோம்' என கவர்னர் கூறுகிறார். இதுதொடர்பாக, மாநில அரசின் கருத்து என்ன?' என கேள்வி எழுப்பினார்.
நாஜிம் எம்.எல்.ஏ., பேசும்போது, 'மாநிலத்தை சக்கரவர்த்தி ஆள வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். ராணி எலிசபெத் ஆளக் கூடாது. மாநில அந்தஸ்து கேட்டு தான் என்.ஆர்.காங்., கட்சி உதயமானது. உள்ளூர் அதிகாரியைக் கூட மாற்றுவதற்கு நமக்கு அதிகாரம் இல்லை. மாநில அந்தஸ்து பெறுவதற்கு என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது? ' என்றார்.
சுயேச்சை எம்.எல்.ஏ., நேரு பேசும்போது, 'கவர்னர் எதை நினைத்தாலும் செய்யலாம் என்ற நிலையே உள்ளது. புதுச்சேரி நகராட்சி ஆணையராக ஐ.ஏ.எஸ்., அதிகாரியை நியமித்துள்ளனர். இது, முதல்வர், அமைச்சர்களுக்கு தெரியுமா? தமிழ் தெரியாத அதிகாரியிடம் மக்கள் பிரச்னையை எப்படி பேசுவது? மாநில அந்தஸ்து அவசியம் நமக்கு தேவை. மின்துறையில் 'ப்ரீபெய்டு மீட்டர்' தொடர்பாக பேச வேண்டும்' என்றார்.
தொடர்ந்து, 'மாநில அந்தஸ்து வேண்டும்... மாநில அந்தஸ்து வேண்டும்...' என்று கோஷம் எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர் சிவா, மாநில அந்தஸ்து விவகாரத்தில் சரியான நடவடிக்கை எடுக்காததை கண்டித்து வெளிநடப்பு செய்வதாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து, தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் 6 பேரும் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.